| 
        
	| தென்னவன் மதுரையி லிருக்குஞ் சித்தர்யாம் நின்னிடை வந்துளே நின்னைக் கண்டுதான்
 நன்னிதி வேண்டநம் மோலை கொண்டுநம்
 இன்னிசைப் பாணபத் திரனிங் கெய்தினான்.
 |       (இ 
        - ள்.) நிம்னிடை வந்துளேன் யாம் - நின்னிடத்து வந்துளே மாகிய யாம், தென்னவன் மதுரையில் சித்தர் - பாண்டியனது மதுரையி
 லுள்ள சித்தராவேம்; நின்னைக் கண்டு - உன்னைப் பார்த்து, நல்நிதி
 வேண்ட - நல்ல பொருள் வேண்டுதற் பொருட்டு, நம் ஓலைகொண்டு
 - நமது திருமுகம் பெற்றுக்கொண்டு, நம் இன்இசைப் பாணபத்திரன் -
 நமது இன்னிசை பாடும் பாணபத்திரன், இங்கு எய்தினான் - இங்கு
 வந்தனன். (16)
 
	
	| மற்றவற் கருநிதி கொடுத்து மன்னநீ தெற்றென வரவிடு கென்று சித்தர்தாஞ்
 சொற்றனர் போயினார் சுரக்குந் தண்ணளி
 ஒற்றைவெண் குடையினா னுறக்க நீங்கினான்.
 |       (இ 
        - ள்.) மன்ன நீ - மன்னனேநீ, அவற்கு அருநிதி கொடுத்து - அப்பத்திரனுக்கு அரிய பொருள் கொடுத்து, தெற்றென வரவிடுக என்று -
 விரைந்து வரவிடக்கடவை என்று, சித்தர் தாம் சொற்றனர் போயினார் -
 சித்தமூர்த்திகள் கூறி மறைந்தனர்; சுரக்கும் தண் அளி - உயிர்களிடத்துச்
 சுரந்தெழும் தண்ணிய அருளையுடைய, ஒற்றை வெண் குடையினான் -
 ஒப்பற்ற வெண்குடையையுடைய சேரமான் பெருமாள், உறக்கம் நீங்கினான் -
 துயிலுணர்ந்தனன்.
       தெற்றென 
        : விரைவு குறித்தது. விடுகென : அகரந்தொக்கது. சொற்றனர் : முற்றெச்சம். மற்று, தாம் என்பன அசைகள். (17)
 
        
	| கங்குல்வாய்க் கண்டவக் கனவைப் பெண்ணையந் தொங்கலான் றமரொடு சொல்லிச் சேற்கணாள்
 பங்கினான் றிருமுகங் கொணர்ந்த பத்திரன்
 எங்குளான் கொல்லெனத் தேட வெண்ணுவான்.
 |       (இ 
        - ள்.) பெண்ணையந் தொங்கலான் - அழகிய பனம் பூ மாலையை யணிந்த அவ்வேந்தன், கங்குல்வாய்க் கண்ட அக்கனவை - இரவிலே கண்ட
 அக்கனவினை, தமரோடு சொல்லி - அமைச்சரோடு கூறி, சேல் கணாள்
 பங்கினான் திருமுகம் கொணர்ந்த பத்திரன் - அங்கயற் கண்ணி யார்
 பங்கனது திருமுகத்தைக்கொண்டு வந்த பாணபத்திரன், எங்குளான்
 கொல்லென - எங்கிருக்கின்றானோ என்று, தேட எண்ணுவான் - தேடக்
 கருதுவான்.
       அம், 
        சாரியையுமாம். கொல் : ஐயப்பொருட்டு. (18)   |