பக்கம் எண் :

430திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



தோடி றப்பொரு கயற்கணி னாடான்
     சொன்ன வாறொழுகு மன்னவர் மன்னன்
நாடி யத்தகைய விறலியை யீழ
     நாட்டி னும்வர வழைத்து விடுத்தான்.

     (இ - ள்.) பாடினிக்கு எதிர் ஓர் பாடினிதன்னைப் பாடவிட்டு - இந்தப்
பாடினிக்கு எதிராக ஒரு பாடினியைப் பாடவிட்டு, இவள் படைத்த செருக்கை
ஈடு அழிப்பல் என எண்ணி எழீஇ - இவள் கொண்ட செருக்கினை
வலியழிப்பேனென்று கருதி எழுந்து, தன் இறைமகற்கு அணுது இசைத்தலும் -
தன் மன்னனுக்கு அச்செய்தியைக் கூறியவளவில், அந்தத் தோடு இறப்பொரு
கயல்கணினாள் - தோடு இற்றோழியும்படி போர்புரியுங் கயல்போன்ற
கண்ணையுடைய அக் காமக்கிழத்தி, சொன்னவாறு ஒழுகும் மன்னவர்
மன்னன் - சொன்னபடி நடக்கும் மன்னர் மன்னனாகிய அப்பாண்டியன்,
அத்தகைய விறலியை நாடி - அங்ஙனம் பாடி வெல்லுந் தகுதியையுடைய
பாடினியை ஆராய்ந்து கண்டு, ஈழ நாட்டினும் வரவழைத்து விடுத்தான் -
ஈழ நாட்டினின்றும் வரவழைத்தான்.

     ஈடழிப்பல் என்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று;
ஈடு - வலிமை. எழீஇ : சொல்லிசை யளபெடை. தோடு - காதணி. கண்
காதள வோடுதலை இங்ஙனங் கூறினார். நாட்டினும் நாட்டினின்றும்.
விடுத்தான், விட்டான் என்பதுபோலத் துணிவுப் பொருளில் வந்தது. (4)

பந்த யாழ்முதுகு தைவர விட்டுப்
     பாட லாயமிரு பக்கமு மொய்ப்ப
வந்த பாடினி மடந்தையு மன்னர்
     மன்னனைத் தொழுதொர் கின்னரமாதிற்
சந்த வேழிசைமி ழற்றின ணின்றா
     டன்னை நோக்கியொரு மின்னிடை யாண்மேற்
சிந்தை போக்கிவரு தீப்பழி நோக்காத்
     தென்ன ருக்கரச னின்னது செப்பும்.

     (இ - ள்.) பந்தம் யாழ் முதுகு தைவரவிட்டு - கட்டமைந்த யாழ்
முதுகினைத் தடவுமாறு தொங்கவிட்டு, பாடல் ஆயம் இருபக்கமும்
மொய்ப்ப - பாடும் மகளிர் கூட்டம் இரண்டு பக்கங்களிலும் மொய்ப்ப,
வந்த பாடினி மடந்தையும் - வந்த விறலியாகிய மாதும், மன்னர்
மன்னனைத் தொழுது - வேந்தர் வேந்தனாகிய பாண்டியனைத் தொழுது,
ஓர் கின்னரமாதில் - ஒரு கின்னர மங்கைபோல, சந்த ஏழ் இசை மிழற்றினள்
நின்றாள் - பண்ணமைந்த ஏழிசைகளையும் பாடி நின்றள்; தன்னை நோக்கி
- அங்ஙனம் நின்ற அவளை நோக்கி, ஒரு மின் இடை யாள்மேல் சிந்தை
போக்கி - ஒரு மின்போலும் இடையினையுடையாள் மேல் மனத்தைப்
போக்கினமையால், வரு தீப்பழி நோக்கா - மேலே விளையுங் கொடிய
பழியினைக் கருதாத, தென்னருக்கு அரசன் - பாண்டியருக்கு வேந்தனாகிய
இராச ராசன், இது செப்பும் - இதனைச் சொல்லுவான்.