|  
        என்னும் வெற்றிவேலையுடையானும், 
        அவ்வியம் அவித்த சிந்தை  
        அதுலவிக்கிரமன் என்பான் - பொறாமையை ஒழித்த உள்ளத்தையுடைய  
        அதுலவிக்கிரமன் எனப்படுவானும். 
            தேரார் 
        - பகைவர். (7)  
      
	
	எழில்புனை யதுல கீர்த்தி யெனவிரு பத்தி ரண்டு 
		வழிவழி மைந்த ராகி வையங் காத்த வேந்தர் 
		பழிதவி ரதுல கீர்த்தி பாண்டியன் றன்பா லின்பம் 
		பொழிதர வுதித்த கீர்த்தி பூடணன் புரக்கு நாளில்.  | 
	 
	 
	
		
       
           (இ 
        - ள்.) எழில் புனை அதுலகீர்த்தி என - அழகுமிக்க  
        அதுலகீர்த்தியும் என்று, இருபத்திரண்டு மைந்தர் வழிவழி ஆகி -  
        இருபத்திரண்டு மைந்தர்கள் வழி வழியாகத்தோன்றி, வையகம் காத்த  
        வேந்தர் - இந் நிலவுலகை ஆண்ட அவ் வேந்தருள், பழிதவிர் அதுல  
        கீர்த்திபாண்டியர் தன்பால் - பழி நீங்கிய அதுலகீர்த்தி என்னும்  
        வழுதியினிடத்து, இன்பம் பொழிதர உதித்த - இன்பம் மிகும்படி தோன்றிய,  
        கீர்த்திபூடணன் புரக்கும் நாளில் - கீர்த்திபூடண பாண்டியன்  
        செங்கோலோச்சிவருங் காலையில்.  
           இருபத்திரண்டு 
        மைந்தர் வழிவழித்தோன்றி வையகம் புரந்தனர்  
        அங்ஙனம் புரந்த வேந்தருள் என விரித்துரைத்துக் கொள்க. புனைதலும்  
        பொழிதலும் மிகுதலை உணர்த்தின. (8)  
      
	
	 கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி 
		ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப் 
		பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப் 
		பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் *கோத்த வன்றே. | 
	 
	 
	
		
       
           (இ 
        - ள்.) கருங்கடல் ஏழும் - கரிய கடல்கள் ஏழும், ஒருங்கு  
        பொங்கி எழுந்து - ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, உருத்துச் சீறி ஆர்த்து  
        - வெகுண்டு சீறி ஆரவாரித்து, காவல் கரைகடந்து - காவலாகிய  
        எல்லையைக்கடந்து, உம்பரோடு இம்பர் - விண்ணுலகும் மண்ணுலகும்,  
        பொரும் எட்டு கடகரியும் - போர்செய்யும் மதத்தையுடைய எட்டு  
        யானைகளும், நெடும் பொன் எட்டுகிரியும் - பெரிய பொன்னையுடைய எட்டு  
        மலைகளும், பெருங்கடி நேமி வரையும் - பெரிய அச்சத்தைத் தரும்  
        சக்கரவாள கிரியும், பேர - நிலைபெயருமாறு, பிரளயம்கோத்த - பிரளயமாக  
        ஒன்றோடொன்று கோத்தன. 
            கருமை 
        - பெருமையுமாம். உறுத்துச்சீறி, ஒருபொருட் பன்மொழி. கடி  
        - காவலுமாம். அன்று, ஏ : அசைகள். (9) 
       
            பா 
        - ம். *கோத்த தன்றே.   
       |