|
நூலாசிரியர் வரலாறு
திருவிளையாடற்
புராணம் என்னும் இந் நூலியற்றிய ஆசிரியர் பெயர்
பரஞ்சோதி முனிவர் என்பது. இவர், தமிழ்நாட்டில் தலை சிறந்ததாய வான்
பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி பாயுஞ் சோழ வள நாட்டிலுள்ள
திருமறைக்காடு என்னும் திருநகரில் வழி வழிச் சைவ வேளாள மரபில்
மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவர்க்குப் புதல்வராய்த் தோன்றினர். இளம்
பருவத்தில் தென் மொழி வட மொழி கற்றுச் சிறந்த புலமையுடையவராய்
விளங்கினர். சிவாகமங்களையும் அவற்றின் சாரமாகிய சித்தாந்த
சாத்திரங்களையும் பயின்று தேர்ந்தார். தேவாரம் திருவாசகம் முதலிய
பன்னிரு திருமுறைகளையும் ஐயந்திரிபுற ஓதியுணர்ந்து சிவநெறிச்
செல்வராய்ச் சிறப்பெய்தியிருந்தனர்.
இவர்
தாம் பிறந்த திருநகராகிய மறைக்காட்டுத் தல வரலாறு வட
மொழியில் இருந்தது கண்டு முதலில் அதனை மொழி பெயர்த்துத்
"திருமறைக்காட்டுத் தலபுராணம்" (வேதாரணிய புராணம்) என
வெளிப்படுத்தினர். பின்னர்ச் சிவப்பதிகள் பல காண விருப்புற்றுச் சென்றார்.
திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தில்லை
முதலிய பதிகட்குச் சென்று மதுரைப் பதி வந்தடைந்தார். அது மூர்த்தி தலம்
தீர்த்தம் என்ற மூன்றானும் சிறப்புற்று விளங்குது என்பதையும், சிவபெருமான்
அன்பர்கள் உய்யும் பொருட்டு நிகழ்த்திய அறுபத்து நான்கு
திருவிளையாடலுடையது என்பதையும், இறையனார் முதலிய சங்கப் புலவர்
கூடித் தமிழாராய்ந்த பெருமையுடையது என்பதையும் ஆய்ந்து
அங்கயற்கண்ணியையும் அண்ணலையும் அல்லும் பகலும் வழிபட்டு ஆங்கு
நெடிதுநாளுறைந்தார்.
அங்ஙனம்
தங்கிய காலத்தில் அந் நகர மாந்தர் பலரும் பரஞ்சோதி
முனிவரைக் கண்டு பணிந்து மதுரைத் திருவிளையாடல் அறுபத்து
நான்கினையும் தமிழிற் பாடியருள வேண்டும் என வேண்டினர்.
வேம்பத்தூரராற் செய்யப்பட்டு வழங்கி வரும் திருவிளையாடல் வடமொழிக்
கதையோடு பொருத்தமின்றியிருப்பதையும், சொற் சுவை பொருட்சுவை
|