பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகவரிசை521



நிரம்பாது பத்திச் சுவை குன்றிப் பாக்கள் இருப்பதையும் எடுத்து
மொழிந்தனர். வட மொழியும் தென் மொழியும் கற்றுவல்ல ஆசிரியராகிய
பரஞ்சோதியார் மதுரைப்பதி வரலாறு கூறும் நூல்கள் பலவும் ஆய்ந்து
அதனுண்மை கண்டார். காந்தபுராணத்தின் ஒரு பகுதியாகிய ஆலாசிய
மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு பாடத் துணிந்தனர்.

     ஒரு நாட் கனவில் அங்கயற்கண்ணியம்மையார் தோன்றி "இறைவன்
திருவிளையாடலை இன்னே பாடுக" என ஆணை தந்து மறைந்தார்.
சத்தியின் ஆணையாற் பாடத் தொடங்கியதற்கு அறிகுறியாகச் "சத்தியாய்ச்
சிவமாகி" எனத் தொடங்கிப் பாடி முடித்தார். அந் நூலினைச் சிவபெருமான்
வீற்றிருக்கும் திருக்கோயின்முன் அறுகாற் பீடத்தமர்ந்து வட மொழி தென்
மொழிவல்ல புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றியருளினர்.

     அன்றியும் திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்
பத்தந்தாதி என்னும் இரு நூல்களும் இவர் இயற்றியருளினர். இவர் பாடிய
நூல் கற்பார்க்கு எளிமையும் இனிமையும் உடையதாய் உவமையுருவக முதலிய
அணிகள் நிறைந்து இன்பச் சுவையும் பத்திச் சுவையும் இயைந்து களிப்
பூட்டவல்லதாய் ஒளிர்கின்றது. இவர் காலம் பதினாறாம் நூற்றாண்டின்
முற்பகுதியென்பர்.