|
முன்னுரை
ஆக்கியோன்
(1)
திருவிளையாடற் புராணம் என்னும் இந்நூல், சோழ வள நாட்டுள்ள
திருமறைக்காட்டில் வழி வழிச் சைவ வேளாளர் மரபில் தோன்றிய
பரஞ்சோதி முனிவர் என்னும் பாவலர் பெருமானாற் பாடப்பட்டது. இவர்
வரலாற்றை முன்னர்க் காண்க.
நூல்
தோன்றிய வழி
மதுரைச் சிறப்பு
(2)
"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" எனப் புகழப்பட்ட
தமிழகத்திற் "செந்தமிழ் நாடு" எனச் சிறப்பாகக் கூறப்படுவது பாண்டி நாடாம்
என்பது பலரும் அறிந்ததே. அந் நாட்டு மன்னர் பாண்டியர்க்கு வழி வழி
அரசிருக்கையாய தலைநகர் மதுரை. இது திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள்,
குன்றெறிந்த முருகவேள் வந்தமர்ந்து தமிழ் ஆராய்ந்த தனிச் சிறப்புடையது;
மலையத்துவசன் மகளாக அங்கயற்கண்ணம்மை பிறந்து வளர்ந்து அரசு
புரிந்த பெருமையுடையது; சிவபெருமானும் முருகவேளும் முறையே சுந்தர
மாறனாகவும் உக்கிரப் பெருவழுதியாகவும் பெயர் புனைந்து செங்கோல்
செலுத்திய சீர்வாய்ந்தது; தலைச் சங்கமும் கடைச் சங்கமும் தழைத்து
வளர்ந்து தமிழாராய்தற்கு நிலைக்களமாயது; எட்டுத் தொகையுள் ஒன்றாகிய
பரிபாடலில் (வையை, மதுரை) முப்பது பாடல்களாற் பாராட்டப் பெற்றது;
பாண்டி நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருப்பதிகளில் "கூடல் புனவாயில்"
என முன் வைத்தெண்ணப்பட்ட முதன்மையுடையது; திருவாலவாய், கூடல்
எனச் சிறப்புப் பெயர் பெற்றது. இப் பதியில் இறைவன் நிகழ்த்திய
திருவிளையாடல் அறுபத்து நான்கு என அறிஞர் கூறுவர்.
திருவிளையாடல்
வந்துள்ள நூல்கள்
(3)
திருவிளையாடல் வரலாற்றிற் பல தமிழ் நாட்டு இலக்கியங்களில்
வந்துள்ளன. தமிழன்னை தாட்சிலம்பாகப் போற்றப்படுஞ் சிலப்பதிகாரத்தில்
"அடியிற்றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவே லெறிந்த வான்பகை பொறாது"
என்ற அடிகள் "கடல் சுவறவேல்விட்டது" என்ற கதையையும், "செங்கணா
யிரத்தோன் திறல்விளங் காரம், பொங்கொளி மார்பிற் பூண்டோன்" "முடி
|