பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகவரிசை525



     பின் எமது மொழியில் இக் கதைகள் முன்னரே எழுதி இலக்கிய
வடிவில் இருக்கின்றன என எடுத்துக் காட்டி ஏமாற்றி வாழ்ந்த காலம்.
அக்காலத்தில் வாழ்ந்த அம் முனிவர் அதனை முதனூலாகக் கொள்ளல்
மிகவும் பொருத்தமுடையதேயாகும். இக் காலத்தும் வட மொழி வழி வந்தது
செந்தமிழ் எனக் கூறுவோரும் சிலர் உளரன்றோ? ஆரிய மொழி
பெயர்ப்பாயினும் இந் நூலிற் கூறப்படுங் கதைகள் தமிழ்நாட்டில்
நிகழ்ந்தவையே. உலக வழக்கினும் செய்யுள் வழக்கினும் பயின்றவை. இக்
கதைகளை வடநூற் புலவர் வரைந்ததாற் சில மாறுபாடு காணப்படினும்
இந்நூலாசிரியர் தமிழ் நூற் கருத்துக்கு மாறுபாடின்றித் திருதியமைத்துள்ளார்.
சொற்களையும் சொற்றொடர்களையும் தமிழ் மொழிக்கேற்ப
இனிமையாயமைத்து எழிலுறப் புனைந்திருப்பது பாராட்டற்பாலது. மொழி
பெயர்ப்பு என முன்னுவதற்குத் தக்க காரணம் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டுக்
கதையைத் தமிழ் மொழியில் ஆக்கியது இந்நூல் எனக் கோடலே சிறந்தது.
ஆயினும் அக் காலநிலை நோக்கி ஆசிரியர் அதனை முதனூல் எனக்
கொண்டனர் எனக் கொள்க.

     வழங்கும் நாடு

     (7) பாண்டிய நாட்டிற் சிறந்த தென் மதுரைப் பதியில் நிகழ்ந்தவை
இவ்வறுபத்து நான்கு திருவிளையாடல்கள்; எனினும் சேர நாடு, சோழ நாடு,
தொண்டை நாடு, கொங்கு நாடு எனப் பகுக்கப்பட்ட நாடுகளிலும்
இவ்வரலாற்றினை அறியாத புலவர் எவரும் இரார். "மதிமலி புரிசை மாடக்
கூடல்" என்ற திருமுகப் பாசுரம் சேரமான் பெருமாணாயனார்க்கு இறைவன்
விடுத்தனர் எனிற் சேர நாடு அறிந்த வரலாறு தான் அது. சோழனை மடுவில்
வீட்டிய வரலாறு, சோழ நாடறிந்ததுதான்! பாண்டியன் சுரந்தீர்த்தவர்
திருஞானசம்பந்தர்; தேவாரத் திருமுறையில் திருநீற்றுப் பதிகமும்
ஒன்றன்றோ? மற்றும் பல பதிகங்கள் மதுரையில் திருவாய் மலர்ந்துளினர்
சம்பந்தர்; திருவாலவாய்த் திருப்பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் சென்று
பாடிய சிவத்தலங்கள் எண்ணிறந்தவையன்றோ? அவர் சென்ற
தலங்களெல்லாம் மதுரைத் திருவிளையாடலை யறிந்திருக்குமன்றோ? முதற்
சங்கமும் கடைச் சங்கமும் கூடலின் முளைத்துத் தழைத்தனவெனத்
தமிழலக்கியம் சாற்றுகின்றன. கடைச் சங்கப் புலவருள் ஒருவன் நக்கீரன்;
"கொங்குதேர் வாழ்க்கை" என்ற கவிக்குக் குற்றங் கூறினன். அவ் வரலாறு
அச் சங்கப் புலவர் பலரும் அறிந்ததுதானே? புலவர் பலரும் பல நாட்டிலும்
பல ஊர்களிலும் இருந்து வந்து கூடித் தமிழ் ஆராயும் அறிஞர்தாம். எனவே
அப் புலவர்கள் சென்ற விடமெல்லாம் கதைகளும் சென்றிருக்கும்.