|
வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும், எனையாளு
மீசன் செயல்" என்றும் கூறிய கவிகள் இதற்குச் சான்றாம். எல்லாம் இறைவன்
செயலென்று துணிந்து மக்கள் தத்தங் கடமையை யாற்றி வாழ்வதற்குரிய
வழியாக இந்நூற் பொருள் அமைந்துள்ளது.
தகுதியுடையோர்
(11)
தெய்வம் ஒன்றென்றும் உண்டென்றும் உறுதி கொண்டவர்; உலகில்
நிகழுஞ் செயல்கள் முழுவதும் திருவருட் செயலெனச் சிந்தை வைப்பவர்;
மக்கட் பிறப்பின் பயன் இறைவனடி வணங்குதலே என்ற எண்ணமுள்ளோர்;
நல்வினை தீவினை புரிந்தோர் அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை
எய்துதல் வாய்மையென மனங் கொண்டவர்; எஞ்ஞான்றும் இறைவனை
வணங்கியியன்ற நல்வினையியற்றி வாழும் இயல்புடையவர்; தமிழ் மொழியின்
தனிச் சிறப்புணர்ந்தவர்; அம் மொழியின் சொற்சுவை, பொருட்சுவை, அருமை,
பெருமை, தொன்மை, மென்மை, நன்மை, வனப்பு முதலிய இயற்கையை
யாய்ந்தவர். நம் நாட்டுப் பண்பாடு, நாகரிகம், கலை, நிலை தெரிந்தவர்; சைவ
சமயத்தின் தனிச் சிறப்பும் கொள்கையும் அக் கொள்கை வழி நின்ற
சான்றோர் வரலாற்றுண்மையும் நுண்மையின் ஆய்ந்து காணும்
நோக்கமுடையார் ஆகிய யாவரும் பயிலவதற்குத் தக்கது இந்நூலாகும்.
மற்றையோர் பயின்றால் நற்பயன் வாய்ப்பது அரிது.
பயன்
(12)
இந்நூல் கற்பவர் கேட்பவர் எவரும் தெய்வத் திருவருள் கைவரப்
பெறுவர். அன்பு, அருள், வாய்மை, மனத் தூய்மை, நிறை, பொறை, அடக்கம்
முதலிய மக்கட் பண்பு வாய்க்கப் பெறுவர். இல்லறமாகிய நல்லற வாழ்விற்
சிறந்து அதன் பயனாகிய என்றுங் குன்றாப் பொன்றாப் புகழை எய்துவர்.
பின்னர்த் துறவறம் பூண்டு விரதமும் ஞானமும் வேண்டிய
உள்ளத்தராயொழுகிச் சித்தியும் முத்தியும் பெற்றுத் திகழ்வரென்பது தேற்றம்.
இந்
நூலாசிரியர் காலமும் அரங்கேற்றிய களனும் இதனை
இயற்றுதற்குத்தக்க காரணமும் ஆசிரியர் வரலாற்றிற் காண்க.
இந்நூல்
பதிப்பித்த முறை
(13)
இந்நூல் மூல மட்டு தமிழ் மொழிக்கும் சைவ சமயத்திற்கும்
உழைத்த நம் பெரியார் யாழப்பாணம் உயர்திரு ஆறுமுக நாவலரவர்களால்
முதலிற் பதிப்பிக்கப் பெற்றது. பின்னர்த் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்
பிள்ளையவர்கள் மாணவரில் ஒருவராகிய சோட சாவதானம் சுப்பராயச்
|