பக்கம் எண் :

530திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     எடுத்தாண்ட பழைய இலக்கியப் பகுதி

     (15) பரஞ்சோதி முனிவர் பல நூற் பயிற்சியுடையவர் என்பது அவர்
இயற்றிய திருவிளையாடலால் அறியலாம். கலித்தொகை என்னும் நூலில்
"வையைதன், நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லா னேராதார்,
போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்" என வந்துள்ளது. இதன்
பொருள் "வையை யாற்றுநீர் சூழ்ந்து கோட்டை மதிலைப் பொருகின்ற
இப்பகையன்றிப் பகைவர் சூழ்ந்து மதிலை வளைத்துப் போர் செய்வதை
யறியாத புனலையுடைய மதுரையையுடையவன்" என்பது. இப் பொருளை
ஆசிரியர், மதுரை நகர் மதிற் சிறப்புக் கூறும் இடத்தில் "அம்மதில்
திரைக்கரந் துழாவி, அகழ வோங்குநீர் வையையா வல்லது வேற்றுப் பகைவர்
சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே" என அமைத்தனர்.

     சீவக சிந்தாமணியில் "கோட்டிளந்தகர்களும் கொய்ம்மலர்த்
தோன்றிபோற், சூட்டுடைச் சேவலும்" எனவும், "பொருவில் யானையின்
பழுப்போற் பொங்குகாய்க் குலையவரை" எனவும், "முட்டிலா மூவறுபாடை
மாக்களாற் புட்பயில் பழுமரப் பொலிற் றாகிய" எனவும், "புதுக்கலம் போலும்
பூங்கனியால்" எனவும், திருத்தக்க தேவர் கூறிய உவமை பொருள்களை
ஆசிரியர் இந்நூலில் "கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர் போர்
முட்டி" எனவும், "ஆறிடுமதமால் யானைப் பழுக்குலை யவரை", எனவும்,
"பாய தொன்மரப் பறவைபோற் பயன் கொள்வான் பதினெண், டேய
மருந்தருங் கிளந்தசொற் றிரட்சி தான்" எனவும், "கலம்பெய்காட்சி போலுதிர்
பழம்" எனவும், முறையே அமைத்திருப்பவற்றைக் காண்க.

     "தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன்" என்பதனை,
"வஞ்சவினைக் கொள்கலனா முடலைத் தீவாய் மடுக்கிலேன் வரையுருண்டு
மாய்ப்பே னல்லேன்" எனவும், "மழக்கையிலங்கு பொற்கிண்ண
மென்றலாலரியை யென்றுனைக் கருது கின்றிலேன்" என்பதனை,
"மழலைதேறாச், சிறியனா மொருதலை கையிற் கொண்ட செம்பொன்மணி
வள்ளம் போற் றேவர் யார்க்கும், அறிவரியாய் சிறியேனை யெளிவந்தாண்ட
அருமையறியேன்" எனவும், "முன்னைப் பழம்பொருட்கு முன்னைப்
பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" என்பதனை,
"முன்னா முதுபொருட்கு முன்னா முதுபொருளாய்ப், பின்னாம் புதுமைக்கும்
பின்னாகும் பேரொளியாய்" எனவும், "வானாகி மண்ணாகி வளியாகி
யொளியாகி, ஊனாகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்" என்பதனை,
"மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி, விண்ணா யிருசுடரா
யித்தனையும் வேறாகி" எனவும் மணிவாசகர் திருவாசகப் பகுதிகளை