பக்கம் எண் :

532திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



செய்தனன் இறைவன். சோழ மன்னன் தோற்றான். அச சோழ மன்னன்
இறைவன் எய்த அம்பினை எடுத்துப் பார்த்து அதிற் "சுந்தரேசன்" என்று
பொறித்திருக்கக் கண்டு அஞ்சியோடினன் என்பது.

     (3) சங்கப்பலகை தந்த படலம் : காசியிற் பிரமன் பரிமகம் புரிந்தது.
பின் காயத்திரி, சாவித்திரி, வாணி இவர்களுடன் கூடிக் கங்கையாடச்
சென்றான். வாணி வழியில் விஞ்சை மாதொருத்தி பாடிய கானங்கேட்டுத்
தாமதித்து வந்தனள். அது குறித்துப் பிரமன் வெகுண்டு நாற்பத்தெட்டுப்
புலவராகப் பிறக்கும்படி நாமகளைச் சபித்தனன். அதன்படி சங்கப் புலவராய்
வந்தமர்ந்து தமிழ் வளர்த்தனள் வாணி. பாண்டியன் சங்க மண்டபம்
அமைத்துத் தந்தனன். வந்து வந்து பல புலவரும் வாது செய்தனர். அவ்
வாதத்தாற் புலவருக்குண்டாய வருத்தம் நீங்க இறைவன் சங்கப் பலகை
தந்தனன். பின்னர் இறைவன் ஒரு புலவராய் வந்து சங்கப் புலவர் கருத்து
மாறுபாட்டினைத் தவிர்த்துத் தலைவராயமர்ந்திருந்து தமிழாய்ந்தனன் என்பது.

     (4) தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் : இப் படலத்தில் வங்கிய
சூடாமணி மாறன் நந்தனவனம் வைத்தனன். சண்பக மலர் புனைந்து சிவனை
வணங்கினன். செண்பகமாறனெனப் பெயர் பூண்டனன். இளவேனில் வந்தது.
மைந்தரும் மகளிரும் நந்தன வனத்தமர்ந்து இன்பம் நுகர்ந்தனர். நீராடலும்
உண்டாட்டும் ஊடலும் கூடலும் ஆகிய விளையாடல் யாவும் நிகழ்ந்தன என
முன்னர்க் கூறி, அப் பருவச் சிறப்பும் விளையாடற் சிறப்புங்கூறும் ஆசிரியர்
உவமையும் உருவகமும் கற்பனையும் ஆகிய அணிகள் பல அமைத்துக்
காட்டுகின்றார். முருக்க மரங்கள் பூத்துச் சூரியனைப் போலத் தோன்றின;
காஞ்சிமர மலர்ந்து இந்திரனைப் போல இலங்கின; குங்கும மலர்ந்து
சந்திரனைப் போல விளங்கின; காயா மலர்ந்து கண்ணனைப் போலக்
கவினுற்று நின்றன என்று உவமை வாயிலாக ஒவ்வொன்றின் இயற்கையைக்
கூறுவது புலவர்க்குப் புது விருந்தாகும். வேனிற் பருவத்தைக் கோமகன்
ஆகவும், தாமரையைக் களாஞ்சி யேந்துவாராகவும், குயிலை மத்தள
முழக்குவோராகவும், கிளியை மங்கலம் பாடுவாராகவும், வண்டுகளைப்
பாணர்களாகவும், தாழையை வாளேந்தி நிற்கும் வீரர்களாகவும் உருவகஞ்
செய்திருப்பது மிகவும் பாராட்டற்பாலதே. இயற்கையாக ஆடுகின்ற மயிலை
மகளிர் கூந்தலை மேகமென்று கருதி ஆடும் என்றும், ஓடுகின்ற மயிலை
அவர் கண்களை அம்பென்று கருதி ஓடும் என்றும், குயில்கள் மகளிர்
உருவத்தை மாந்தளிர் என்று எண்ணிக் கோதிண்பதற்கு அருகிற் செல்லும்
என்றும், பின் அவர் பண்ணிசையைக் கேட்டு நாணிப் பதுங்கியொதுங்கும்