பக்கம் எண் :

702திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



கைம்மறியில் வணிகருக்கு விலைகொடுப்பான்
     வருவார்முன் கருணை நாட்டம்
அம்மகன்மெ னிரப்பியிள நகையரும்பி
     நின்றாரை யங்குக் காணார்.

     (இ - ள்.) இ மணியால் இழைத்து நவமுடி சூட்டி - இந்த மணிகளைக்
கொண்டு புதிய மகுடஞ் செய்து சூட்டி, இசிங்க இள ஏறு அன்ன
செம்மல்தனை - இவ்விளமையையுடைய ஆண் சிங்கம் போன்ற இறைமகனை,
அபிடேக பாண்டியன் என்று இயம்பும் என - அபிடேக பாண்டியனென்று
பெயரிட்டழையும் என்று சொல்ல, செம்பொன் தூக்கி - செம்பொன்னைத்
துலையாற் றூக்கி, கைம் மறி இல் வணிகருக்கு விலை கொடுப்பான் வருவார்
- கையின்கண் மானைக் கரந்து வந்த வணிகருக்கு விலை கொடுப்பதற்கு
வருகின்ற அமைச்சர்கள், முன் - முன்பு, அம்மகன் மேல் கருணை நாட்டம்
நிரப்பி - அவ்வரச குமரன் மேல் அருள் நோக்கினை மிகச் செலுத்தி,
இளநகை அரும்பி நின்றாரை - புன்னகை அரும்பி நின்ற வணிகேசரை.
அங்கு காணார் - அவ்விடத்திற் காணாதவராயினர் எ - று.

     நவமுடி இழைத்துச் சூட்டியென்க; நவம் - புதுமை; இந் நவமணியால்
என்றியைத்துரைத்தலுமாம். என - என்ற பொழுது. சிவபிரானாகிய
வணிகரென்பார், 'கைம்மறியில் வணிகர்' என்றார். வருவார்
காணாராயினாரென்க. வருவார் : பெயர். (84)

ஓருருவாய் நேர்நின்ற வணிகேசர்
     விடையின்மே லுமையா ளோடும்
ஈருருவாய் முக்கண்ணு நாற்கரமு
     மஞ்சமர ரிறவா வாறு
காருருவா யெழுமிடறுங் காட்டித்தங்
     கோயில்புகக் கண்டா ரின்று
பாருருவாய் நின்றவணி கேசரிவ
     ரெனவேபின் பற்றிப் போவார்.

     (இ - ள்.) ஓர் உருவாய் நேர் நின்ற வணிகேசர் - ஓர் உருவாகி
நேரே நின்ற வணிகர் பெருமான், விடையின்மேல் உமையாளோடும் ஈர்
உருவாய் - இடபவூர்தியின் மேல் உமைப் பிராட்டியோடும் இரண்டு
திருவுருவமாய், முக் கண்ணும் நால் கரமும் - மூன்று கண்களையும் நான்கு
கைகளையும், அஞ்சு அமரர் இறவாவாறு - அஞ்சிய தேவர்கள் இறவாத
வண்ணம், கார் உருவாய் எழுமிடறும் - கரியவுருவாய் எழுந்த
திருமிடற்றினையும், காட்டி - தோன்றச் செய்து, தம் கோயில் புகக் கண்டார்
- தமது திருக்கோயிலுட் போதலைக் கண்டவர்கள், இன்று பார் உருவாய்
நின்ற வணிகேசர் இவரே என - இன்று பாரின்கண் வணிகர் தலைவர்
வடிவினராய் நின்றவர் இவரே என்று, பின் பற்றிப் போவார் -
பின்றொடர்ந்து சென்றனர் எ - று.

     சிவபெருமான் ஒருவரே 'படைப்பாதித் தொழிலும் பத்தர்க்கருளும்
பாவனையும்' முதலியன நிகழ்த்துதற்குச் சிவமும் சக்தியுமென ஈருருவாயினர்