பக்கம் எண் :

186திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



மூர்த்திவிசேடப் படலம்

ஆலவா யலர்ந்த* செம்பொ னம்புயப் பெருந்தீர்த் தத்தின்
மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண்
நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த
மூலமா விலிங்க மேன்மை முறையினா லறைய லுற்றாம்.

     (இ - ள்.) ஆலவாய் - திருவாலவாயின்கண், அலர்ந்த - மலர்ந்த.
செம்பொன் அம்புயம் - சிவந்த பொற்றாமரையாகிய, பெருந் தீர்த்தத்தின் -
பெருமை பொருந்திய தீர்த்தத்தின், மேல் அவாம் - விண்ணுலகத்ாரும்
விரும்புகின்ற, பெருமை தன்னை - பெருமையை, விளம்புவார் எவரே -
கூறுவார் யாரே; அங்கண் - அவ்விடத்து, நீலம் மாமிடற்று - மிக்க
கருமையுடைய கண்டத்தினையும், முக்கண் - மூன்று கண்களையுமுடைய,
நிராமயன் - சோமசுந்தரக் கடவுளாகிய, அறிவு ஆனந்தம் - ஞானானநத
வடிவான, மூலம் மா இலிங்கம் - பெருமை பொருந்திய மூல விலிங்கத்தின்,
மேன்மை - பெருமையை, முறையினால் அறையல் உற்றாம் - முறைப்படி
சொல்லுதலுற்றோம் எ - று.

     விளம்புவா ரெவரே யென்றது யாமும் இவ்வளவில் அமைதும்
என்றபடி. நீலம் மா : ஒருபொருளிருசொல்; மா பெருமையுமாம். நிராமயன்
- நோயில்லாதவன். ஆமயம் - நோய். நிராமயனாகிய இலிங்க மூர்த்தி
யென்க. (1)

பொன்னெடு மேலு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப்
பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்.

     (இ - ள்.) பொன் நெடு மேரு - பொன்னாகிய நெடிய மேலுமலையும்,
வெள்ளிப் பொருப்பு - கைலைமலையும், மந்தரம் - மந்தரமலையும்,
கேதாரம் - திருக்கேதாரமும், வல்நெடும் புரிசை சூழந்த - வலிய நெடிய
மதில் சூழ்ந்த, வாரண வாசி - காசியு ஆதி - முதலாகவுள்ள, பன் அரும்
தலங்கள் தம்மில் - சொல்லுதற்கரிய திருப்பதிகளின் கண், பராபர இலிங்கம்
தோன்று முன்னர் - சிவலிங்கம் தோன்றுவதற்கு முன்பே, இக்கடம்பின்
மாடே - இக்கடம்ப மரத்தினடியில், இச்சைவ லிங்கம் முளைத்தது - இந்தச்
சிவலிங்கம் தோன்றியருளியது எ - று.

     பராபரன் என்பதில் னகர வொற்றுக் கெட்டது; பரமும் அபர
முமானவன்; பரைக்கு நாயகன் என்றுங் கூறுவர். சிவன் சைவனெனப்
படுதலைச் 'சைவா போற்றி' என்பதனா னறிக. (2)

அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவிட் டெழுந்த விந்தக் காரண மிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன +விந்தத்
திப்பிய விலிங்க மூல விலிங்கமாய்ச் சிறக்கு மன்னோ.


     (பா - ம்.) * ஆலவாயமர்ந்த. +திரண்டான.