பக்கம் எண் :

தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்303



4. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்

[கலிவிருத்தம்]
கன்னியொரு பங்கினர் கடம்பவன மெல்லாம்
நன்னகர மானது நவின்றுமுல கீன்ற
அன்னைமக ளாகிமல யத்துவச னாகுந்
தென்னனிடை வந்துமுறை செய்ததுரை செய்வாம்.

     (இ - ள்.) கன்னி ஒரு பங்கினர் - உமையவளை யொருபாகத்தி
லுடைய இறைவரது, கடம்பவனம் எல்லாம் - கடம்பவனம் முழுதும், நல்
நகரம் ஆனது நவின்றும் - நல்ல நகரமாகிய தன்மையைக் கூறி னோம்;
உலகு ஈன்ற அன்னை - உலகங்கள் அனைத்தையும் பெற்ற அன்னையாகிய
உமாதேவியார், மலயத்துவசன் ஆகும் தென்னனிடை - மலயத்துவசனென்னம்
பாண்டி மன்னனிடத்து, மகளாகி வந்து - புதல்வியாய்த் தோன்றி,
முறைசெய்தது உரைசெய்வாம் - செங்கோ லோச்சிய திருவினையாடலைக்
கூறுவாம் எ - று.

     உலகீன்ற அன்னையாயினும் கன்னி என்றார்;

"பவன்பிரம சாரியாரும் பான்மொழி கன்னியாகும்"

என்பது சிவஞானசித்தி. நவின்றும் : தனித் தன்மைப் பன்மை; றும் : விகுதி.
உலகீன்ற அன்னை மகளாயினள், ஈதொரு வியப்பிருந்தவா றென்னே யென்க.
(1)

மனுவற முவந்துதன் வழிச்செல நடத்தும்
புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
கனியமுத மன்னகரு ணைக்குறையுள் காட்சிக்
கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்.

     (இ - ள்.) மலயத்துவசன் - அம் மலயத்துவசனென்பான், மனு அறம்
உவந்து தன்வழி செல நடத்தும் புனிதன் - மனுதருமமானது மகிழந்து
தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன்; வென்றி புனை
பூணான் - வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன்; கனி அமுதம்
அன்ன - சுவை முதிர்ந்த அமுதத்தைப் போலும், கருணைக்கு உறையுள் -
அருளுக்குத் தங்குமிடமானவன்; காட்சிக்கு இனியன் -
(முறைவேண்டினாருக்கும் குறைவேண்டினாருக்கும்) காண்டற்கு எளியனாய்
இன்முகத்தை யுடையவன்; வடசொல் கடல் தமிழ்க் கடல் இகந்தோன் -
வடமொழிகடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டு கடந்தவன் எ-று.

     மனு தருமமும் தனது செங்கோலின் வழிப்பட ஆட்சி நடத்து மென
இவனது நீதியின் மேன்மை கூறினார்; வழிச்செல என்பதற்கு அதற்குரிய
வழியில் நடக்க என்றுரைத்தலுமாம். வென்றியாகிய பூண் உயிர்கள் பசியும்
பிணியுமின்றி வாழுமாறு செய்தலால் ‘அமுத மன்ன கருணை’ யென்றார்.