பக்கம் எண் :

456திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

[அறுசீரடியாசிரியவிருத்தம்]
உலகிய னிறுத்து வான்வந் தொருபரஞ் சுடர்வான் றிங்கட்
குலமணி விளக்கை வேட்டுக் கோமுடி கவித்துப் பாராண்
டிலகுறு தோற்ற மீதான் முனிவர ரிருவர் தேற
அலகிலா னந்தக் கூத்துச் செய்தவா றறைய லுற்றாம்.

     (இ - ள்.) ஒரு பரஞ் சுடர் - ஒப்பற்ற பரஞ்சோதியாகிய இறைவன்,
உலகு இயல் நிறுத்துவான் வந்து - உலகியலை நிறுத்துதற் பொருட்டுச் சுந்தர
பாண்டியனாய் வந்து, வான் திங்கள் குல மணி விளக்கை - வானின்கண்
உலவும் சந்திரன் மரபுக்கு மாணிக்க விளக்காகிய தடாதகைப் பிராட்டியாரை,
வேட்டு - திருமணஞ் செய்து கொண்டு, கோமுடி கவித்துப் பார் ஆண்டு -
அரசமுடிசூடி உலகை ஆண்டு; இலகுறு தோற்றம் ஈது - விளங்கும் வரலாறு
இது; முனிவரர் இருவர் தேற - இரண்டு முனிவர்கள் தெளிந்துய்யுமாறு,
அலகு இல் ஆனந்தக்கூத்து செய்தவாறு - அளவில்லாத ஆனந்தக் கூத்தை
ஆடியருளிய திருவிளையாடலை, அறையலுற்றாம் - இனிக் கூறத்
தொடங்கினேம் எ - று.

     உலகியல் - உலகம் நடத்தற் கேதுவாகிய அறம் பொருள் இன்பங்கள்;
'உலகிய னிறுத்தும் பொருண்மர பொடுங்க', 'உலகியல் கூறிய பொருளிது
வென்ற வள்ளுவன்' என்னும் கல்லாடப் பகுதிகளிலும் உலகியல் என்பதற்குப் பொருள் இதுவாகல் வேண்டும். நிறுத்து வான் : வினையெச்சம். ஒரு என்றது
தனி முதல் என்றபடி குலத்தை என்றும் விளங்கச் செய்தமையின் 'குலமணி
விளக்கு' என்றார். கோமுடி என்றது நிலமுழுதாளும் பெரு வேந்தர்க்குரிய
முடியென்றவாறு. ஆல் : அசை. முனிவரர் - முனிவருள் மேலாயவர். (1)

புண்ணிய மலர்மென் கொம்பை வேட்டபின் புவனந் தாங்குங்
கண்ணுதன் மூர்த்தி யாய கவுரியன் மணத்தில் வந்த
மண்ணியல் வேந்தர் வானோர் மாதவர் பிறரு முண்ண
நண்ணுதி ரென்ன லோடு நண்ணுவார் விரைவி னெய்த.

     (இ - ள்.) புண்ணியம் மலர் மென் கொம்பை - அறவடிவமாகிய
மெல்லியய பூங்கொம்பு போலும் பிராட்டியை, வேட்டபின் புவனம் தாங்கும்
- திருமணம் செய்து கொண்டபின் உலகையாளும், கண் நுதல் மூர்த்தியாய
கவுரியன் - நெற்றிக் கண்ணையுடைய இறைவனாகிய சுந்தர பாண்டியன்,
மணத்தில் வந்த - திருமணத்தில் வந்த, மண் இயல் வேந்தர் - மண்ணுலகை
ஆளுதலமைந்த மன்னர்களும், வானோர் - தேவர்களும், மாதவர் -
முனிவர்களும், பிறரும் - ஏனையோர்களும், உண்ண நண்ணுதிர்
என்னலோடும் - அமுதுண்ண வருவீர் எனக் கட்டளையிட, விரைவின் எய்த
நண்ணுவார் - விரைந்து அடைதற்கு வருகின்றவர்கள் எ - று.