பக்கம் எண் :

494திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



9. எழுகடலழைத்த படலம்

[கொச்சகக்கலிப்பா]
முடங்கன்மதி முடிமறைத்த முடித்தென்னன் குறட்கன்னக்
கிடங்கரொடு நதியழைத்த கிளர்கருணைத் திறனிதுமேன்
மடங்கல்வழி கவர்ந்தான்பொன் மாலைபடிந் தாடவெழு
தடங்கடலு மொருங்கழைத்த தன்மைதனைச் சாற்றுவாம்.

     (இ - ள்.) முடங்கல் மதி முடிமறைத்த முடித்தென்னன் - வளைந்த
பிறையையணிந்த சடை முடியை மறைத்த மகுடத்தையுடைய சுந்தர
பாண்டியன், குறட்கு - குண்டோதர பூதத்துக்கு, அன்னக் கிடங்கரொடு நதி
- அன்னக் குழியையும் வையையையும், கிளர் கருணை - விளங்கும்
கருணையினாலே, அழைத்த திறன் இது - அழைத்த திருவிளையாடல் இது; மேல் - பின், மடங்கல் வலி கவர்ந்தான் - நரசிங்கத்தின் வலியைக் கவர்ந்த அச் சுந்தரபாண்டியன், பொன்மாலை படிந்து ஆட - காஞ்சன மாலை திளைத்து நீராடுதற் பொருட்டு, எழுதடங் கடலும் ஒருங்கு அழைத்த
தன்மைதனைச் சாற்றுவாம் - ஏழு பெரிய கடலையும் ஒரு சேர
அழைத்தருளிய திருவிளையாடலைக் கூறுவாம் எ - று.

     கிடங்கர் : ஈற்றுப் போலி. திருமால் நரசிங்கவுருவாய்த் தோன்றி
இரணியனைக் கொன்று செருக்கிய காலையில் இறைவன் சரபவுருவெடுத்து
அந் நரசிங்கத்தின் வலி தொலைத்தான் என்பது வரலாறு; மடங்கல் -
இயமனுமாம். (1)

ஓதவரும் பொருள் வழுதி யுருவாகி யுலகமெலாஞ்
கீதளவெண் குடைநிழற்றி யறச்செங்கோல் செலுத்துநாள்
போதவரும் பொருளுணர்ந்த விருடிகளும் புனிதமுனி
மாதவரும் வரன்முறையாற் சந்தித்து வருகின்றார்.

     (இ - ள்.) ஓத அரும் பொருள் - சொல்லுதற்கரிய மெய்ப்பொருளாகிய
சோமசுந்தரக் கடவுள், வழுதி உருவாகி - பாண்டியனுருத் தாங்கி, உலகம்
எலாம் சீதள வெண்குடை நிழற்றி - உலகமனைத்திற்கும் குளிர்ந்த வெள்ளிய
குடையால் நிழல் தந்து, அறம் செங்கோல் செலுத்து நாள் - அற நூல்
வழியே செங்கோலோச்சி வருங்காலத்து, போத அரும் பொருள் உணர்ந்த
இருடிகளும் - ஞான நூலின் அரிய பொருளையுணர்ந்த இருடிகளும், புனித
முனி மாதவரும் - (ஏனைய) தூய முனிவராகிய தவப்பெரியாரும், வரன்
முறையால் சந்தித்து வருகின்றார் - வரன் முறைப்படி (அப் பாண்டிய
மன்னனைச்) சந்தித்து வருகின்றார்கள் எ - று.

     அறம், போதம் என்பன நூலுக்கு ஆகுபெயர். அறவடிவாகிய
செங்கோல் என்றும், அறக்கடவுள் போலச் செங்கோல் செலுத்து நாள்
என்றும் கூறுதலுமாம். புறப்பாட்டில்
"அறம் புரிந்தன்ன செங்கோல்
நாட்டத்து"
என வருதலுங் காண்க; இருடிகள் - சத்த வருடிகள் எனக்
கொள்க. (2)