பக்கம் எண் :

மலயத்துவசனை யழைத்த படலம்501



10. மலையத்துவசனை யழைத்த படலம்

[கலிவிருத்தம்]
எழுகட லழைத்தவா றியம்பி னாமினிச்
செழுமதி மரபினோன் சேணி ழிந்துதன்
பழுதில்கற் பில்லொடும் பரவை தோய்ந்தரன்
அழகிய திருவுரு வடைந்த தோதுவாம்.

     (இ - ள்.) எழு கடல் அழைத்தவாறு இயம்பினாம் - ஏழுகடலையும்
அழைத்த திருவிளையாடலைக் கூறினாம்; இனி - மேல், செழுமதி
மரபினோன் - குளிர்ந்த சந்திரனது குலத்து வந்த மலயத்துவச பாண்டியன்,
சேண் இழிந்து - வானுலகினின்றும் இறங்கி, தன் பழுது இல் கற்பு
இல்லொடும் - குற்ற மற்ற கற்பினையுடைய தன் மனைவி யோடும், பரவை
தோய்ந்து - கடலிலே நீராடி, அரன் அழகிய திருவுரு அடைந்தது -
சிவபெருமானது அழகிய திருவுருவத்தைப் பெற்ற திருவிளையாடலை,
ஓதுவாம் - கூறுவாம் எ - று.

     திருவுரு வடைதல் - சாரூபம் பெறுதல். (1)

புரவலன் தடாதகைப் பூவை யோடும்வந்
துரவுநீர்க் கடன்மருங் குடுத்த சந்தனம்
மரவமந் தாரமா வகுளம் பாடலம்
விரவுநந் தனத்தரி யணையின் மேவினான்.

     (இ - ள்.) புரவலன் - சுந்தர பாண்டியனாகிய இறைவன், தடாதகைப்
பூவையோடும் வந்து - தடாதகைப் பிராட்டியாராகிய பூவை யோடும் வந்து,
உரவு நீர்க்கடன் மருங்கு உடுத்த - வலிய நீரினை யுடைய எழுகடல்
வாவியின் அருகிற் சூழ்ந்த, சந்தனம் மரவம் மந்தாரம் மா வகுளம் பாடலம்
விரவு நந்தனத்து - சந்தன மரமும், குங்கும மரமும் மந்தாரை மரமும்
மாமரமும் பாதிரி மரமும் கலந்து நெருங்கிய நந்தவனத்தின்கண், அரி
அணையில் மேவினான் - சிஙகாதனத்தில் அமர்ந்தருளினான் எ - று.

     மரவம் - குங்கும மரம். பாடலம் - பாதிரி மரம். (2)

தாதவிழ் மல்லிகை முல்லை சண்பகப்
போதுகொய் திளைஞருஞ் சேடிப் பொற்றொடி
மாதருங் கொடுத்திட* வாங்கி மோந்துயிர்த்
தாதர மிரண்டற வமரு மெல்லையில்.

     (இ - ள்.) தாது அவிழ் மல்லிகை முல்லை சண்பகப்போது - மகரந்தத்
தோடு மலர்ந்த மல்லிகை மலரையும் முல்லை மலரையும் சண்பக மலரையும்,
இளைஞரும் சேடிப் பொன் தொடி மாதரும் கொய்து கொடுத்திட -


     (பா - ம்.) * மாதருந் தொடுத்திட.