பக்கம் எண் :

538திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



12. உக்கிரபாண்டியருக்கு வேல்வளைசெண்டு கொடுத்த படலம்

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
உருக்குந் திறலுக் கிரவழுதி
     யுதய மிதுவான் மதியுநதிப்
பெருக்கு்கரந்த சடைக்கற்றைப்
     பெருந்தேர்ச் செழியர் பிரானவற்குச்
செருக்குஞ் செல்வ மணமுடித்துச்
     செவ்வேல் வளைசெண் டளித்துள்ளந்
தருக்கு முடிதந் தரசுரிமை
     தந்த செயலுஞ் சாற்றுவாம்.

     (இ - ள்.) உருக்கும் திறல் உக்கிர வழுதி உதயம் இது - (பகைவரைக்)
கெடுக்கும் வலியுடைய உக்கிரகுமார பாண்டியனது திருவவதாரமாகிய
திருவிளையாடல் இதுவாகும்; வால் மதியும் நதிப் பெருக்கும் கற்றைச் சடை
கரந்த - வெள்ளிய சந்திரனையும் கங்கை யாற்றின் பெருக்கையும் - திரண்ட
சடையையும் மறைத் தருளிய பெருந் தேர்ச் செழியர் பிரான் - பெரிய
தேரினை யுடைய தென்னர் பெருமானாகிய சுந்தரபாண்டியர், அவற்கு -
அவ்வுக்கிர வழுதிக்கு, செருக்கும் செல்வ மணம் முடித்து - களிப்பிற்குரிய
திருமண முடித்து, செவ்வேல் வளைசெண்டு அளித்து - சிவந்த
வேற்படையையும் வளையையும் செண்டையும் கொடுத்து, உள்ளம் தருக்கும்
முடி தந்து - மனங் களிப்பதற் கேதுவாகிய திரு முடி சூட்டி, அரசு உரிமை
தந்த செயலும் சாற்றுவாம் - அரச வுரிமையும் கொடுத்தருளிய
திருவிளையாடலையும் கூறுவாம் எ - று.

     உருக்கும் - புவியிலுள்ளாரை அன்பால் உருகச் செய்யும் என்றுமாம்;
"மண் கனிப்பான்" என்னும் சிந்தாமணித் தொடர்க்குக் ‘குழவிப் பருவத்தாலும்
அரச நீரியாலும் வீடுபேற்றாலும் மண்ணை யுருக்கு மவன்’ என்று
நச்சினார்க்கினியர் கூறியவுரை இங்கு நோக்கற் பாலது. வான்மதி -
வானிலுள்ள மதி யென்றுமாம். இது வால் எனப் பிரித்து, ஆல் அசை
யெனினும் பொருந்தும். மதியும் நதியும் கரந்த சடையை யுடைய சிவன் என்று
கொண்டு, சிவபெருமானாகிய செழியற்கு என்றுரைத்தலுமாம். பெருந்தேர் -
மகாரதம். குருதி தோய்வேலென்பார் ‘செவ்வேல்’ என்றார். உரிமையும் என
உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. (1)

வையைக் கிழவன் றன்னருமைக்
     குமரன் றனக்கு மணம்புணர்ச்சி
செய்யக் கருதுந் திறனோக்கி
     யறிஞ ரோடுந் திரண்டமைச்சர்