பக்கம் எண் :

70திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



           திருநகரச் சிறப்பு
மங்க லம்புனை பாண்டிநா டாகிய மகட்குச்
சங்க லம்புகை தோளிணை தடமுலை யாதி
அங்க மாம்புறந் தழுவிய நகரெலா மனைய
நங்கை மாமுக மாகிய நகர்வளம் பகர்வாம்.

     (இ - ள்.) மங்கலம்புனை - பல நலன்களையும் பூண்ட, பாண்டி நாடு
ஆகிய மகட்கு - பாண்டிநாடு என்னும் மங்கைக்கு, புறம் தழுவிய நகர்
எலாம் - (அதன்) புறத்தே சூழ்ந்த நகரங்கள் அனைத்தும், சங்கு அலம்பு
கை - வளை ஒலிக்குங் கைகள், தோள் இணை - இரண்டு தோள்கள்,
தடம்முலை - பெரிய கொங்கைகள், ஆதி அங்கம் ஆம் - முதலிய
உறுப்புக்கள் ஆகும்; அனைய நங்கை - அங்ஙனமாய நங்கையின், மாமுகம்
ஆகிய நகர்வளம் - பெருமை பொருந்திய முகமாகிய மதுரை நகரின்
சிறப்பினை, பகர்வாம் - கூறுவாம் எ - று.

     மங்கலம் - நலம். நாட்டிற்கு நலமாவன : பிணியின்மை, செல்வம்,
விளைவு, இன்பம், ஏமம் என்பனவும் பிறவுமாம்; அவற்றைத் திருக்குறளில்
‘நாடு’ என்னும் அதிகாரத்திற் காண்க. வருகிற பாட்டில் ‘திருமுக
மதுரையாம் புரமே’ என்று கூறுதலின், இங்கே முகமாகிய நகர் என்று
கூறிப்போந்தார். நங்கை - பெண்டிரிற் சிறந்தாள். பாண்டிநாடு ஏனை
நாடுகளினுஞ் சிறந்ததென்பார் ‘நங்கை’ என்றும், மதுரை அந்நாட்டு ஏனைப்
பதிகளினுஞ் சிறந்ததென்பார் ‘மாமுகமாகிய நகர்’ என்றும் கூறினார். (1)

கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ்
அங்க மேதிருச் சுழியலவ் வயிறுகுற் றாலஞ்
செங்கை யேடக மேனியே பூவணந் திரடோள்
பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம் புரமே.

     (இ - ள்.) (அந்நங்கைக்கு) கொங்கை - கொங்கைகள், பரங்
குன்றமும் கொடுங்குன்றும் - திருப்பரங்குன்றமும் திருக்கொடுங்
குன்றமுமாகும்; கொப்பூழ் அங்கம் - உந்தியாகிய உறுப்பு, திருச்சுழி யல் -
திருச்சுழியலென்னுந் தலமாகும்; அவ்வயிறு - ழேகிய வயிறு, குற்றாலம் -
திருக்குற்றாலமென்னுந் தலமாகும்; செங்கை - சிவந்தகை, ஏடகம் -
திருவேடகமென்னுந் தலமாகும்; மேனி - உடல், பூவணம் - திருப்பூவண
மென்னுந் தலமாகும்; திரள்தோள் - திண்ட தோள்கள், பொங்கர்
வேய்வனம் - சோலைகள் சூழ்ந்த வேணுவனமென்னுந் தலமாகும்;
திருமுகம் - அழகிய முகம், மதுரை புரம்ஆம் - மதுரை யாகிய நகரம்
ஆகும் எ - று.

     அந்நங்கைக்கு என்பது வருவிக்க. கொடுங்குன்று - பிரான்மலை.
வேய்வனம் - திருநெல்வேலி. குன்றுகள் கொங்கைக்கு உவமமாகலின்
பரங்குன்றம் கொடுங் குன்றுகளைக் கொங்கையென்றும், நீர்ச்சுழி, ஆலிலை,
தாமரை, மலர், மூங்கில் என்பன கொப்பூழ் முதலியவற்றுக்கு உவமமாகலின்,
பெயரான் அவற்றோடியையுடைய பதிகளை அவ்வங்கங்களென்றும்,