பக்கம் எண் :

வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்709



18. வருணன்விட்டகடலை வற்றச்செய்த படலம்

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
காழ்கெழு கண்டத் தண்ணல் கௌரியன் மகுடஞ்சூட
வீழ்கதிர் மணிக ளீந்த வியப்பிது விடையோன் சென்னி
வாழ்கரு முகிலைப் போக்கி மதுரைமேல் வருணன் விட்ட
ஆழ்கடல் வறப்பக் கண்ட வாடலைப் பாடல் செய்வாம்.

     (இ - ள்.) காழ்கெழு கண்டத்து அண்ணல் - கருமை பொருந்திய
திருமிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுள், கௌரியன் மகுடம் சூட -
பாண்டியன் முடி சூட, வீழ் கதிர் மணிகள் ஈந்த வியப்பு இது -
விரும்பப்படுகின்ற நவமணிகளை அளித்தருளிய திருவிளையாடல் இது; (இனி),
விடையோன் சென்னி வாழ் கருமுகிலைப் போக்கி - இடபவூர் தியையுடைய
அப்பெருமான் தம் திருமுடியிற் றங்கிய கரிய முகில்களை விடுத்து, மதுரை
மேல் வருணன் விட்ட ஆழ்கடல் வறப்பக் கண்ட - மதுரையின் மேல்
வருணன் ஏவிய ஆழ்ந்த கடலானது சுவறுமாறு செய்தருளிய, ஆடலைப்
பாடல் செய்வாம் - திருவிளையாடலைப் பாடுவோம் எ - று.

     காழ் - கருமை; காழகம் என்னும் பெயருங் காண்க. ஞாயிறு முதலிய
கதிர்களும் விரும்பும் மணி என்னலுமாம். வியப்பு - மேன்மை.
மேன்மையாகிய திருவிளையாடல். போக்கி வறப்பக் கண்ட வென்க. (1)

சித்திரை மதியிற் சேர்ந்த சித்திரை நாளிற் றென்னன்
மைத்திரண் மிடற்று வெள்ளி மன்றுளாற் களவு மாண்ட
பத்திமை விதியிற் பண்டம் பற்பல சிறப்ப நல்கிப்
புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்த லுற்றான்.

     (இ - ள்.) தென்னன் - அபிடேக பாண்டியன், சித்திரை மதியில்
சேர்ந்த சித்திரை நாளில் - சித்திரைத் திங்களில் வந்த சித்திரை நாளில்
மைத்திரள் மிடற்று வெள்ளிமன்றுளாற்கு - கருமை மிக்க மிடற்றினையுடைய
வெள்ளியம்பல வாணனுக்கு, அளவுமாண்ட பத்திமை - அளவிறந்த
அன்பினால், விதியில் - ஆகம நெறிப்படி, பண்டம் பற்பல சிறப்ப நல்கி -
பூசைப் பொருள்கள் பலவற்றைச் சிறக்க அளித்து, புத்தியும் வீடும் நல்கும்
பூசனை நடத்தலுற்றான் - போகத்தையும் வீடுபேற்றையும் அளிக்கும் பூசையை
நடாத்தத் தொடங்கினான் எ - று.

     சித்திரைத் திங்களில் நிறைமதியுடன் கூடிய சித்திரை நாளில் என்க.
பத்திமையால் என உருபு விரிக்க. சிறப்ப - மிக. விதியின் நடத்தலுற்றான்
என இயையும். புத்தி தத்துவத்தின் பரிணாமமாகிய போகத்தைப் புத்தி
என்றார்; புத்தி - ஞானமுமாம். (2)

நறியநெய் யாதி யார நறுங்குழம் பீறா வாட்டி
வெறியகர்ப் புரநீ ராட்டி யற்புத வெள்ளம் பொங்க
இறைவனை வியந்து நோக்கி யேத்துவா னெறிநீர் வையைத்
துறைவநீ யென்கர்ப் பூர சுந்தர னேயோ வென்றான்.