பக்கம் எண் :

142திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இருபத்தேழாவது அங்கம் வெட்டின படலம்

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
வேதகந் தரத்து* முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகந் தவிர்த்த வாறு பகர்ந்தனம் விஞ்சை யீந்த
போதகன் மனைக்குத் தீங்கு+புந்திமுன் னாகச் செய்த
சாதகன் றனைப்போ ராற்றித் தண்டித்த தண்டஞ் சொல்வாம்.

     (இ - ள்.) வேத சுந்தரத்து முக்கண் வேதியன் - வேதம் பாடுந்
திருமிடற்றினையுடைய மூன்று கண்களையுடைய மறையோனாகிய
சோமசுந்தரக் கடவுள், மறையோன் செய்த பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம்
- பார்ப்பனன் புரிந்த மாபாதகத்தினை நீக்கியருளிய திருவிளையாடலைக்
கூறினோம்; விஞ்சை ஈந்த போதகன் மனைக்கு - (இனி) வரள் வித்தை
கற்பித்த ஆசிரியன் மனைவிக்கு, புந்தி முன்னாகத் தீங்கு செய்த
சாதகன்தனை - அறிவு சான்றாகத் தீங்கு புரிந்த மாணவனை, போர் ஆற்றித்
தண்டித்த தண்டம் சொல்வாம் - போர் புரிந்து தண்டித்த திருவிளையாடலைக் கூறுவோம்.

     வேதசந் தரித்த என்னும் பாடத்திற்கு இரத குளிகை போன்று
வேதித்தலைக் கொண்ட என்றும், பிரமன் தலையைத் தாங்கிய என்றும்
பொருள் கூறலாகும். போதகன் - ஆசிரியன். சாதகன் - மாணாக்கன்.
புந்தி முன்னாக என்பது மனப்பூர்வமாக என்று வடமொழியிற் கூறப்படும். (1)

கூர்த்தவெண் கோட்டி யானைக் குலோத்துங்க வழுதி ஞாலங்
காத்தர சளிக்கு நாளிற் கடிமதி லுடுத்த கூடல்
மாத்தனி நகருள் வந்து மறுபுலத் தவனா யாக்கை
மூத்தவ னொருவன் வைகி முனையவாள் பயிற்றி வாழ்வான்.

     (இ - ள்.) கூர்த்த வெண் கோட்டு யானைக் குலோத்துங்க வழுதி -
கூரிய வெள்ளிய கொம்புகளையுடைய யானைப் படையினையுடைய
குலோத்துங்க பாண்டியன், ஞாலம் காத்து அரசு அளிக்கு நாளில் -
புவியினைப் பாதுகாத்து ஆட்சி புரியுங் காலத்தில், மறுபுலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் - அயல் நாட்டினனாய் மூப்பினால் உடம்பு முதிர்ந்த
விஞ்சையனொருவன், கடிமதில் உடுத்த கூடல் மாத்தனி நகருள் வந்து வைகி
- காவலையுடைய மதில் சூழ்ந்த கூடல் என்னும் பெரிய ஒப்பற்ற நகரின்


   (பா - ம்.) * வேதகந் தரித்த. +போதகன் றனக்கு.