பக்கம் எண் :

கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்27



இருபத்தொன்றாவது கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்

[கலிநிலைத்துறை]
செல்லார் பொழில்சூழ் மதுராபுரிச் சித்த ரெல்லாம்
வல்லா ரவரா டலையாருரை செய்ய வல்லார்
எல்லாரும் வியப்புற வித்தனிச் சித்த சாமி
கல்லானை தின்னக் கரும்பீந்த கதையுஞ் சொல்வாம்.

     (இ - ள்.) செல் ஆர் பொழில் சூழ் மதுராபுரிச் சித்தர் - மேகங்கள்
தவழப் பெற்ற சோலைகள் சூழ்ந்த மதுரைப் பதியில் எழுந்தருளிய
சித்தமூர்த்திகள், எல்லாம் வல்லார் - எல்லாம் செய்ய வல்லவர் (ஆகலின்),
அவர் ஆடலை உரை செய்யவல்லார் யார் - அவர் செய்தருளும்
திருவிளையாடலை உரைக்க வல்லவர் யாவர்; எல்லாரும் வியப்பு உற
இத்தனிச் சித்தசாமி - (இனி) அனைவரும் அதிசயமடைய இவ்வொப்பற்ற
சித்தமூர்த்திகள், கல்லானை தின்னக் கரும்பு ஈந்த கதையும் சொல்வாம் -
கல்லானை தின்னுமாறு கரும்பினைக் கொடுத்த திருவிளையாடலையும்
கூறுவாம்.

     வல்லார் ஆகலின் என விரித்துரைக்க; எல்லாம் வல்லாராகிய சித்தர்
எனக் கூட்டலுமாம். சிறிது கூறினேமென்பார் ‘யாருரை செய்யவல்லார்’
என்றார். (1)

பின்னேய மச்சம் பெருகப்பெரி யோரை யெண்ணா
தென்னே யெளியா ரௌயானிகழ்ந் திங்ங னீண்டச்
சொன்னே னவர்க்கென் குறையென்னிற் றுருவி நானே
தன்னே ரிலாதார் தமைக்காணத் தகுவ னென்னா.*

     (இ - ள்.) பின் நேயம் அச்சம் பெருக - பின்பு அன்பும் அச்சமும
பெருக, யான் பெரியோரை எண்ணாது எளியாரென இகழ்ந்து இங்ஙன்
ஈண்டச் சொன்னேன் - யான் பெரியோரை மதியாது எளியாரைப் போல
(க்கருதி) அவமதித்து இங்கு வரும்படி சொல்வித்தேன், என்னே - (என்
அறியாமை இருந்தவாறு) என்னே, அவர்க்கு என்னில் குறை என் -
அவருக்கு என்னிடம் பெறவேண்டிய குறைபாடு யாதுளது, தன் நேர்
இலாதார் - தனக்கொப்பில்லாத அச்சித்த சாமிகளை, நானே துருவிக்காணத்
தகுவன் என்னா - யானே தேடிக்காணத் தக்கவனாவேன் என்று கருதி.
 


                 (பா - ம்) * தகுவ தென்னா.