பக்கம் எண் :

இரசவாதஞ்செய்த படலம்279



முப்பத்தாறாவது இரசவாதஞ் செய்த படலம்

[கலி நிலைத்துறை]
வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர்
விரத னாகிநீ ரருத்திய வினையுரை செய்தும்
பரத நூலிய னாடகப் பாவையா ளொருத்திக்
கிரத வாதஞ்செய் தருளிய வாடலை யிசைப்பாம்.

     (இ - ள்.) வரதன் - வள்ளலாகிய சோமசுந்தரக் கடவுள், மீனவன்
படையிடை - பாண்டியன் சேனை நடுவுள், நீர்ப்பந்தர் விரதனாகி வந்து -
தண்ணீர்ப் பந்தர் வைக்கு முனிவனாய் வந்து, நீர் அருத்திய வினை
உரைசெய்தும் - நீரைப் பருகுவித்த திருவிளையாடலைக் கூறினோம்; பரத
நூல் இயல் நாடகப்பாவையாள் ஒருத்திக்கு - பரத நூல் இலக்கண மமைந்த
நாடகத்தில் வல்ல பதுமைபோல்வளாகிய பொன்னனை யாளுக்கு, இரத வாதம்
செய்தருளிய ஆடலை இசைப்பாம் - இரச வாதஞ் செய்த திருவிளையாடலை
(இனிக்) கூறுவாம்.

     வரதன் - வேண்டுவன அளிப்போன். விரதன் - நோன்பினை மேற்
கொண்டுளோன். (1)

பருக்கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண்டிரைக் கரங்களா லீர்ம்புனல் வையை
மருங்கி னந்தன மலர்ந்தபன் மலர்கடூய்ப் பணியப்
புரங்க டந்தவ னிருப்பது பூவண நகரம்.

     (இ - ள்.) பருகை மால்வரை பூழியன் - பருத்த கையையுடைய கரிய
மலைபோலும் யானைப் படையையுடைய பாண்டியனது. பைந் தமிழ்நாட்டின் -
அழகிய தமிழ் நாட்டின்கண், ஈர்புனல் வையை - குளிர்ந்த நீரையுடைய
வையை யாறு, இரங்கு தெள் திரைக் கரங்களால் - ஒலிக்கின்ற தெளிந்த
அலையாகியகைகளால், மருங்கில் நந்தனம் மலர்ந்த - பக்கங்களிலுள்ள
நந்தனவனங்கள் மலர்ந்த, பல் மலர்கள் தூய்ப்பணிய - பல மலர்களையும்
தூவி இறைஞ்ச, புரம் கடந்தவன் இருப்பது - திரிபுரங்களையும் நீறாக்கிய
இறைவன் வீற்றிருக்கப் பெறுவது, பூவண நகரம் - திருப் பூவண மென்னும் பதியாகும்.

     மால் - பெருமையும், மத மயக்கமும் ஆம். பூழியர் என்னும் பெயர்
பூழி நாட்டையுடைய காரணத்தால் முன்பு சேரர்க்குளதாகிப் பின்
பாண்டியர்க்கு வந்திருத்தல் வேண்டும் : பூழி - கொடுந்தமிழ் நாடு