பக்கம் எண் :

304திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



முப்பத்தெட்டாவது உலவாக்கோட்டை யருளிய படலம்

[எழுசீரடி யாசிரிய விருத்தம்]
மின்ப னிக்கதிர் வேணு வானவன் மீன வன்றனை மானவேல்
முன்ப னிக்க வலந்தி ரித்து முடுக்கி நேரி யடுக்கலான்
பின்ப னிக்கம லத்த டத்திற விட்ட வாறிது பெருமைசால்
அன்ப னுக்குல வாத கோட்டை யளித்த வாறு கிளத்துவாம்.

     (இ - ள்.) பனிக் கதிர் மின் வேணி வானவன் - குளிர்ச்சி பொருந்திய கிரணங்களையுடைய சந்திரனையணிந்த மின் போலும் சடையையுடைய
சோமசுந்தரக் கடவுள், மீனவன் தனை - பாண்டியன் பொருட்டு, மானவேல் -
பெருமை பொருந்திய வேற்படையினை, முன் - எதிரே, பணிக்க -
நடுங்குமாறு, வலம் திரித்து - வலமாகச் சுழற்றி, நேரி அடுக்கலான் - நேரி
மலையையுடைய சோழனை, முடுக்கி - துரத்தி, பின் - பின்பு, பனிக்கமலத்
தடத்து இறவிட்டவாறு இது - (அவன்) குளிர்ந்த தாமரைகளையுடைய
அகழியில் வீழ்ந்திறக்கச் செய்த திருவிளையாடல் இதுவாகும்; பெருமை சால்
அன்பனுக்கு - பெருமை நிறைந்த அடியார்க்கு நல்லானுக்கு, உலவாத
கோட்டை அளித்தவாறு - குறையாத அரிசிக் கோட்டையினை (அக் கடவுள்)
அளித்தருளிய திருவிளையாடலை, கிளத்துவாம் - (இனிக்) கூறுவாம்.

     மின்வேணி எனக் கூட்டுக. பனிக்கதிர் - திங்கள். தன் : சாரியை.
மீனவனை - மீனவனுக்கு : வேற்றுமை மயக்கம். முன் முடுக்கிப் பின்
இறவிட்டவாறு என்றுமாம். (1)

[கலிநிலைத்துறை]
பொடியார்க்கு மேனிப் புனிதர்க்குப் புனித வேற்றுக்
கொடியார்க்கு வேதக் குடிமிக்கிணை யான கூடற்
படியார்க்குஞ் சீர்த்திப் பதியேருழ வோரு ணல்லான்
அடியார்க்கு நல்லா னறத்திற்கும் புகழ்க்கு நல்லான்.

     (இ - ள்.) பொடி ஆர்க்கும் மேனிப் புனிதர்க்கு - திருநீறு நிறைந்த
திருமேனியையுடைய தூயவரும், புனித ஏற்றுக் கொடியார்க்கு - வெள்ளிய
இடபக் கொடியையுடையவரும் ஆகிய சோம சுந்தரக் கடவுளுக்கு, வேதக்
குடுமிக்கு இணையான - வேத சிகைக்குச் சமமான, படி ஆர்க்கும் சீர்த்தி
கூடற்பதி - புவி முழுதும் நிறைந்த கீர்த்தியையுடைய மதுரைப் பதியிலே,
ஏர் உழவோருள் நல்லான் - ஏரான் உழுதலைச் செய்யும் வேளாளரில்
சிறந்தவன்