பக்கம் எண் :

478திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



நாற்பத்தாறாவது பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்

[கலிநிலைத்துறை]
தந்தை தாயிழந் தலமரு குருளையைத் தாயாய்
வந்து நாயகன் முலைகொடுத் தருளிய வகையீ
தந்த வாறிரு மைந்தரு மந்திர ராகி
எந்தை யார்சிவ புரம்புகுந் திருந்தவா றிசைப்பாம்.

     (இ - ள்.) தந்தை தாய் இழந்து - தந்தையையும் தாயையும் இழந்து,
அலமரு குருளையை - வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு, நாயகன் தாயாய்
வந்து - இறைவன் தாய்ப் பன்றியாக உருவெடுத்து வந்து, முலை
கொடுத்தருளிய வகை ஈது - முலை கொடுத்த திருவிளையாடல் இது; அந்த
ஆறிரு மைந்தரும் - (இனி) அந்தப் பன்னிரண்டு குமரர்களும், மந்திரர் ஆகி
- பாண்டியனுக்கு அமைச்சர்களாகி(ப்பின்), எந்தையார் சிவபுரம் புகுந்து
இருந்தவாறு இசைப்பாம் - எம் தந்தையாராகிய இறைவரது சிவலோகத்தை
அடைந்திருந்த திருவிளையாடலைக் கூறுவோம். (1)

     குருளையை குருளைக்கு : வேற்றுமை மயக்கம்.

ஆதி நாயகன் றிருவுரு மறைந்தபி னனைய
கோதி லாறிரண் டேனமாக் குமரருங் காலைச்
சோதி யாறிரண் டருக்கர்போற் றோன்றியப் பொருப்பில்
ஓதி யாய்ந்தபல் கலைஞரா யொருங்குவீற் றிருந்தார்.

     (இ - ள்.) ஆதிநாயகன் திரு உரு மறைந்த பின் - முதற் கடவுளாகிய
இறைவன் திரு உருவம் மறைந்தருளி பின்னர், அனைய கோது இல் மா
ஆறீரண்டு ஏனக் குமரரும் - அந்தக் குற்றமில்லாத பெருமையையுடைய
பன்னிரண்டு பன்றி வீரர்களும், காலை - காலையில் எழுந்த, சோதி
ஆறிரண்டு அருக்கர் போல் தோன்றி - ஒளி மிக்க பன்னிரண்டு இளஞ்
சூரியர்களைப் போலக் காணப்பட்டு, அப்பொருப்பில் - அம்மலையின்கண்,
ஓதி ஆய்ந்த பல்கலைஞராய் - கற்று ஆராய்ந்து தெளிந்த பல கலைகளிலும்
வல்லுநராகி, ஒருங்கு வீற்றிருந்தார் - ஒரு சேர வீற்றிருந்தார்கள்.

     திருவுரு - தாயாய் வந்த உருவம். ஆதித்தர் பன்னிருவரும் ஒருங்
குதித்தாற் போல் இப்பன்னிரு குமரரும் விளங்கினரென்றார். அப்பொருப்பு -
அந்தப் பன்றி மலை. (2)