பக்கம் எண் :

நாரைக்கு முத்திகொடுத்த படலம்497



நாற்பத்தெட்டாவது நாரைக்கு முத்திகொடுத்த படலம்

           [கலி விருத்தம்]
அத்தி தந்த விமான வழகியார்*
பத்தி தந்த பறவைக்கு மந்திர
சித்தி தந்த திறனிது நாரைக்கு
முத்தி தந்த கருணை மொழிகுவேம்.

     (இ - ள்.) அத்தி தந்த விமான அழகியார் எட்டு யானைகளால்
தாங்கப் பெற்ற விமானத்தின்கண் எழுந்தருளிய சுந்தர விடங்கப்
பெருமானார், பத்தி தந்த பறவைக்கு - அன்பு செய்த கரிக் குருவிக்கு,
மந்திர சித்தி தந்த திறன் இது - மந்திர சித்தி அருளிய திருவிளையாடல்
இதுவாகும்; நாரைக்கு முதி தந்த கருணை மொழிகுவேம் - (இனி)
நாரைக்கு முத்தி கொடுத்த திருவிளையாடலைக் கூறுவோம்.

     அத்தி - யானை. தந்த - சுமக்கப் பெற்ற. (1)

தேக்கு நீர்வையை நாட்டொரு தென்புலத்
தாக்கு மாடவைப் பொன்றுள தவ்வயின்
வீக்கு யாழ்செயும் வண்டுக்கு வீழ்நற
வாக்கு தாமரை வாவியொன் றுள்ளதால்.

     (இ - ள்.) தேக்கும் நீர்வையை நாட்டு - நிரம்பிய நீரையுடைய
வையையாறு சூழ்ந்த பாண்டி நாட்டின், ஒரு தென் புலத்து - ஒரு சார்
தெற்கின்கண், ஆக்கும் மாட வைப்பு ஒன்று உளது - நிருமிக்கப் பெற்ற
மாடங்களையுடைய பதி ஒன்று உள்ளது; அவ்வயின் - அப்பதியின்கண்,
வீக்கும் யாழ் செயும் வண்டுக்கு - நரம்பின் கட்டமைந்த யாழ் இசை
போல இசைபாடும் வண்டுகளுக்கு, வீழ் நறவாக்கு தாமரை வாவி ஒன்று
உள்ளது - விரும்பும் தேனை வாக்குகின்ற தாமரை மலர்கள் நிறைந்த
வாவி ஒன்று உள்ளது. தேங்கும் என்பது வலித்தலாயிற்று. நற : குறியதன்
இறுதிச் சினை கெட உகரம் பெறாது நின்றது. ஆல் : அசை. (2)

ஆழ மக்க கயந்தலை யத்தலை
வாழு மீன மனைத்தையும் வாய்ப்பெய்து
சூழ நந்துமுத் தீனுந் துறைக்கணே
தாழ்வ தோர்செய்ய தாண்மட நாரையே.


    (பா - ம்.) * விமான மழகியார்.