பக்கம் எண் :

118திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஐம்பத்து நான்காவது
கீரனுக்கு இலக்கண முபதேசித்த படலம்

              அறுசீரடியாசிரிய விருத்தம்
கொன்றையந் தெரியல் வேய்ந்த கூடலெம் பெருமான் செம்பொன்
மன்றலங் கமலத் தாழ்ந்து வழிபடு நாவ லோனை
அன்றகன் கரையே றிட்ட வருளுரை செய்தே மிப்பாற்
றென்றமி ழனையான் றேறத் தெருட்டிய திறனுஞ் சொல்வாம்.

     (இ - ள்.) கொன்றை அம்தெரியல் வேய்ந்த - அழகிய கொன்றை
மாலை அணிந்த, கூடல் எம்பெருமான் - கூடலில் வீற்றிருக்கும்
எம்பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள், மன்றல் அம் செம்பொன் கமலத்து
ஆழ்ந்து - மணமிக்க அழகிய சிவந்த பொற்றாமரைத் தடத்து வீழ்ந்து
அழுந்தி, வழிபடு நாவலோனை - துதித்த நாவலனாகிய நக்கீரனை, அன்று
அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் - அப்பொழுது அகன்ற
கரையின்கண் ஏற்றி யருளிய திருவிளையாடலை உரைத்தேம். இப்பால் -
பின், தென்தமிழ் அனையான் தேற - அழகிய தமிழிலக்கணத்தை
அந்நக்கீரன் தெளியுமாறு, தெருட்டிய திறனும் சொல்வாம் - தெளிவித்த
திருவிளையாடலையும் உரைப்பாம்.

     தென்றமிழ் என்றது இயற்றமிழ் இலக்கணத்தை. தெருட்டிய, பிறவினைப்
பெயரெச்சம், தெருட்டு, பகுதி. (1)

முன்புநான் மாடக் கூடன் முழுமுத லாணை யாற்போய்
இன்புற வறிஞ ரீட்டத் தெய்தியாங் குறையுங் கீரன்
வன்புறு கோட்டந் தீர்ந்து மதுரையெம் பெருமான் றாளில்
அன்புறு மனத்த னாகி யாய்ந்துமற் றிதனைச் செய்வான்.

     (இ - ள்.) நான்மாடக் கூடல் முழுமுதல் ஆணையால் - நான்மாடக்
கூடலின் கண் எழுந்தருளிய முழுமுதற் கடவுளாகிய சோமசுந்தரக் கடவுளின்
ஏவலால், முன்பு போய் - முன்பு சென்று, இன்பு உற - மகிழ்ச்சி மிக,
அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன் - புலவர் கூட்டத்தை
அடைந்து அங்கு வதியும் நக்கீரன், வன்பு உறுகோட்டம் தீர்ந்து - வலிமிக்க
அழுக்காறு நீங்கி மதுரை எம்பெருமான் தாளில் - மதுரையில் அமர்ந்தருளிய
எமது பெருமான் திருவடியில், அன்பு உறுமனத்தனாகி - அன்புமிக்க
மனமுடையனாய், ஆய்ந்து இதனைச் செய்வான் - ஆராய்ந்து இதனைச்
செய்வானாயினன்.

     கோட்டம் - மனக்கோண்; அழுக்காறு. மற்று, அசை. (2)