பக்கம் எண் :

132திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஐம்பத்தைந்தாவது சங்கத்தார் கலகந் தீர்த்த படலம்

           [அறுசீரடியாசிரிய விருத்தம்]
காமனைப் பொடியாக் கண்ட கண்ணுத றென்னூல்* கீர
நாமநற் புலவற் கீந்த நலமிது பொலம்பூங் கொன்றைத்
தாமனச் சங்கத் துள்ளார் தலைதடு மாற்றந் தேற
ஊமனைக் கொண்டு பாட லுணர்த்திய வொழுக்கஞ் சொல்வாம்.

     (இ - ள்.) காமனைப் பொடியாக் கண்ட கண்ணுதல் - மன்மதனை
நீறாக்கிய நெற்றிக்கண்ணையுடைய இறைவன், தென்னூல் -
தமிழிலக்கணத்தை, கீர நாம நல்புலவற்கு ஈந்த நலம் இது - கீரனென்னும்
பெயரையுடைய நல்ல புலவனுக்கு உபதேசித்த திருவிளையாடல் இது;
பொலம்பூங்கொன்றைத் தாமன் - பொன்போன்ற கொன்றைமலர் மாலையை
யணிந்த அப்பெருமான், அச்சங்கத்து உள்ளார் - அச்சங்கப் புலவர்கள்,
தலை தடுமாற்றம் தேற - தத்தம் மயக்கத்தினின்றும் தெளிய, ஊமனைக்
கொண்டு பாடல் உணர்த்திய ஒழுக்கம் சொல்வாம் - மூங்கை ஒருவனால்
பாடல்களின் பெருமை சிறுமையை (அப்புலவர்களுக்கு) அறிவித்தருளிய
திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். (1)

அந்தமில் கேள்வி யோரெண் ணறுவரும் வேறு வேறு
செந்தமிழ் செய்து தம்மிற் செருக்குறு பெருமை கூறித்
தந்தமின் மாறாய்த் தத்தந் தராதர மளக்க வல்ல
முந்தைநூன் மொழிந்த வாசான் முன்னர்வந் தெய்தி னாரே.

     (இ - ள்.) அந்தம் இல் கேள்வியோர் எண்ணறுவரும் - அளவிறந்த
புலமை சான்ற நாற்பத்தெட்டுப் புலவர்களும், வேறு வேறு செந்தமிழ் செய்து
- தனித் தனியாகச் செவ்விய தமிழ்ப்பாக்கள் செய்து, தம்மில் செருக்குறு
பெருமை கூறி - தங்களுள் தருக்குமிக்க பெருமைகூறி, தந்தமில் மாறாய் -
தம்முள்ளே ஒருவர்க்கொருவர் பகையாய், தத்தம் தராதரம் அளக்க வல்ல -
தத்தம் பெருமை சிறுமையை அளந்தறியவல்ல, முந்தை நூல் மொழிந்த
ஆசான் - முன்னூல் மொழிந்தருளிய குரவனாகிய சோமசுந்தரக்கடவுளின்,
முன்னர் வந்து எய்தினார் - திருமுன் வந்து சேர்ந்தனர்.

     செந்தமிழ் - செந்தமிழ்ப்பாக்கள். தருக்குறு பெருமை கூறி
என்பதனைப் பெருமைகூறித் தருக்குற்று என மாறுக. தராதரம் - பெருமை
சிறுமை; தகுதி. (2)


     (பா - ம்.) * தொன்னூல்.