பக்கம் எண் :

190திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஐம்பத்தெட்டாவது வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

              [கொச்சகக்கலிப்பா]
கலைவீசு மதிச்சடையோன் கடற்றுறைவன் றலைச்சென்று
வலைவீசி யவன்பாச வலைவீசும் பரிசிதுமேல்
அலைவீசும் புனல்வாத வூரரைவந் தவிச்சைவலி
நிலைவீசிப் பணிகொண்ட நெறியறிந்த படிமொழிவாம்.

     (இ - ள்.) கலைவீசும் மதிச்சடையோன் - ஒளி வீசும் சந்திரனைத்
தரித்த சடையினையுடைய சோமசுந்தரக்கடவுள், கடல் துறைவன்
தலைச்சென்று - நெய்தனிலத் தலைவனிடத்துச் சென்று, வலைவீசி -
வலையினைவீசி, அவன் பாசவலை வீசும் பரிசு இது - அவனது பாசமாகிய
வலையினை அறுத்தருளிய திருவிளையாடல் இது; மேல் - இனி, வந்து -
(அவ்விறைவன் குரவனாக) எழுந்தருளி வந்து, அலை வீசும் புனல்
வாதவூரரை - அலைகளை வீசும் நீர் சூழ்ந்த திருவாதவூரடிகளை,
அவிச்சைவலி நிலைவீசி - (அவரது) ஆணவமலத்தின் வலியினது
தன்மையைக் கெடுத்து, பணிகொண்ட நெறி - ஆட்கொண்டருளிய
முறைமையால் திருவிளையாடலை, அறிந்த படி மொழிவாம் - அறிந்தவாறு
கூறுவாம்.

     கலைவீசும் என்பதற்குக் கலைகளையிழந்த எனப்பொருள்
உரைப்பாருமுளர். பாசவலை வீசும் என்புழி வீசுதல் போக்குதல் என்னும்
பொருள் மேற்கொள்வர் அவிச்சை - அஞ்ஞானம்; ஆணவம். நிலை -
ஆன்மாவின் அறிவிச்சை செயல்களை மறைக்குந்தன்மை. அறிதற்கரிதென்பது
தோன்ற 'அறிந்தபடி' என்றார். (1)

தொடுத்தவறு மையும்பயனுந் தூக்கிவழங் குநர்போல
அடுத்தவயல் குளநிரப்பி யறம்பெருக்கி யவனியெலாம்
உடுத்தகட லொருவர்க்கு முதவாத வுவரியென
மடுத்தறியாப் புனல்வையைக் கரையுளது வாதவூர்.

     (இ - ள்.) தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர்போல -
ஒருவனைப்பற்றிய வறுமையினையும் அவனாற் பிறர்க்கு ஆகும் பயனையும்
சீர்தூக்கிக் கொடுப்பார் போல, அடுத்த வயல் குளம் நிரப்பி - அடுத்துள்ள
வயல்களையும் குளங்களையும் நிரம்பச்செய்து, அறம் பெருக்கி - (அதனால்)
அறத்தினைப் பெருக்கி, அவனி எலாம் உடுத்தகடல் - நிலவுலகு
அனைத்தையும் சூழ்ந்த கடலானது, ஒருவர்க்கும் உதவாத உவரி என -
ஒருவருக்கேனும் பயன்படாத உவர் நீரையுடையதெனக் கருதி, மடுத்து
அறியாப் புனல் வையைக்கரை - அதிற் பாய்ந்தறியாத நீரினை