பக்கம் எண் :

32திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



ஐம்பத்தொன்றாவது சங்கப்பலகை தந்தபடலம்

           [அறுசீரடி யாசிரிய விருத்தம்]
வேடுரு வாகி மேரு வில்லிதன் னாமக் கோலெய்
தாடம ராடித் தென்ன னடுபகை துரந்த வண்ணம்
பாடினஞ் சங்கத் தார்க்குப் பலகைதந் தவரோ டொப்பக்
கூடிமுத் தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை சொல்வாம்.

     (இ - ள்.) மேருவில்லி - மேருமலையை வில்லாகவுடைய
சோமசுந்தரக்கடவுள், வேடு உருவாகித் தன் நாமக்கோல் எய்து -
வேட்டுவத்திருமேனி கொண்டு தனது திருப்பெயர் தீட்டிய கணைகளை
விடுத்து, ஆடு அமர் ஆடி - வெற்றியையுடைய போர்புரிந்து, தென்னன்
அடுபகை துரந்த வண்ணம் பாடினம் - பாண்டியனது கொல்லும் பகையாகிம்
வந்த சோழனைத் துரத்திய திருவிளையாடலைக் கூறினாம்; சங்கத்தார்க்குப்
பலகை தந்து - (இனி அவ்விறைவனே) சங்கப் புலவர்க்குப் பலகை
அளித்தருளி, அவரோடு ஒப்பக்கூடி - அவரோடு வேற்றுமையின்றிக்
கூடியிருந்து, முத்தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை சொல்வாம் -
முத்தமிழாகிய செல்வத்தைப் பொலிவுபெறச் செய்த திருவிளையாடலைக்
கூறுவாம்.

     கோல் - அம்பு. அடு, பகைக்கு அடை. முத்தமிழ் - இயல், இசை,
நாடகம் என்றும் மூவகைத் தமிழ். தமிழின், இன் : சாரியை அல்வழிக்கண்
வந்தது. (1)

வங்கிய சேக ரன்கோல் வாழுநாண் மேலோர் வைகற்
கங்கையந் துறைசூழ் கன்னிக் கடிமதிற் காசி தன்னிற்
பங்கய முளரிப் புத்தேள் பத்துவாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறைவழி போற்றிச் செய்தான்.

     (இ - ள்.) வங்கிய சேகரன் கோல் வாழுநாள் - வங்கிய
சேகரபாண்டியனது செங்கோல் நன்கு நடைபெறும் நாளில், மேல் ஓர்வைகல்
- முன் ஒரு நாளில், கங்கை அம்துறை சூழ் - கங்கையின் அழகிய துறை
சூழ்ந்த, கன்னிக் கொடிமதில் காசி தன்னில் - அழியாத காவலையுடைய
மதில் சூழ்ந்த காசிப்பதியின்கண், பங்கய முளரிப் புத்தேள் - தாமரைமலரை
இருக்கையாக வுடைய பிரமன், வாம்பரி மாவேள்வி பத்து - தாவுகின்ற
துரங்க வேள்வி பத்தினை, புங்கவர் மகிழ்ச்சி தூங்க - தேவர்கள் மகிழ்கூர,
மறைவழி போற்றிச் செய்தான் - வேதவிதிப்படி பேணிச் செய்தான்.