பக்கம் எண் :

332திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அறுபத்தொன்றாவது மண் சுமந்த படலம்

             [எழுசீரடியாசிரிய விருத்தம்]
பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடி யார்மனம்
புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நகரி ளாயடவி போனபின்
விண்சு மந்தசுர நதியெ னப்பெருகு வித்த வையையிது விடையவன்
மண்சு மந்துதிரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை யோதுவாம்.

     (இ - ள்.) பண்சுமந்த மறை நாடரும் பொருள் - இசையினைத்தாங்கிய
மறைகளும் நாடுதற்கு அரிய மெய்ப்பொருளாகிய இறைவனது, பதம் சுமந்த
முடியார் - திருவடியைத் தாங்கிய முடியினையுடைய வாதவூரடிகளின், மனம்
புண் சுமந்த துயர் தீரவந்த பரி - மனம் புண்படுதற்குக் காரணமாகிய துயரம்
நீங்குமாறு வந்த குதிரைகள், நரிகளாய் அடவிபோனபின் - நரிகளாகிக்
காட்டிற்குச் சென்ற பின்னர், விண் சுமந்த சுரநதி எனப் பெருகுவித்த
வையை இது - வானாற் சுமக்கப் பட்ட தேவயாறாகிய கங்கையைப்போல
வையையைப் பெருகுவித்த திருவிளையாடல் இது; விடையவன் -
ஆனேற்றினையுடைய அவ்விறைவன், மண் சுமந்து திருமேனிமேல் அடிவடுச்
சுமந்த கதை ஓதுவாம் - மண்ணைச்சுமந்து திருமேனியின் கண் பிரம்படியின்
தழும்பினைத் தாங்கிய திருவிளையாடலை (இனிக்) கூறுவாம்.

     புண்சுமந்த துயர் - புண்படுதற்கு ஏதுவாகிய துயர்; பெயரெச்சம்
காரியப் பொருட்டு. (1)

கருங்க டற்றிரை யிடைக்கி டந்துகழல் கலமெ னக்கன முகடளாய்
வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர் மறுகி யுட்கமற வேலினான்
ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை சுமந்தொ துக்கிவரு மோதநீர்ப்
பொருங்க தத்தினை யடக்கு வீரென வமைச்சருந் தொழுது போயினார்.

     (இ - ள்.) ககன முகடு அளாய்வரும் புனல் பரவையுள் - வானின்
முடியை அளாவிவரும் புனற் பரப்பினுள், கருங்கடல் திரையிடைக்கிடந்து
சுழல் கலம் என - கரிய கடலின் அலையினூடு கிடந்து சுழலும்
கப்பலைப்போல, நகர் கிடந்து மறுகி உட்க - நகரமானது கிடந்து சுழன்று
வருந்தாநிற்க, மறவேலினான் - கொலைத்தொழிலையுடைய வேற்படையேந்திய
பாண்டியன், ஒருங்கு அமைச்சரை விளித்து - மந்திரிகளை ஒரு சேர
அழைத்து, நீர் கரை சுமந்து - நீர் கரைபோட்டு வரும் ஓதநீர் ஒதுக்கி -
பெருகிவரும் வெள்ளநீரை ஒதுக்கி, பொரும் கதத்தினை அடக்குவீர் என -
கரையை மோதும் அதன் விரைவினை