I


மூர்த்திவிசேடப் படலம்199



றெறுங்கதிர்கான் மணிமாட மதுரைநா
     யகற்கீந்தோர் செய்த பாவம்
வெறுந்துகள்செய் தைம்பொறிக்கு விருந்தூட்டும்
     பெருங்காம வெள்ளத் தாழ்வார்.

     (இ - ள்.) கங்குல் தெறும் - இருளை ஓட்டும், கதிர்கால் - ஒளியை,
வீசுகின்ற, மணிமாடம் மதுரை நாயகற்கு - மணிகள் பதித்த மாடங்களை
யுடைய மதுரை யிறைவனாகிய சோமசுந்தரக் கடவுளுக்கு, நறும்
திருமஞ்சனம் எடுக்கக் குடம் - மணங்கலந்த திருமஞ்சன மெடுத்தற்குக்
குடமும், ஆட்ட மணிக் கலசம் - அபிடேகிக்க இரத்தினக் கலசமும், நல்ல
வாசம்பெறும் தகைய தூபக்கால் - இனிய மணத்தைத் தரும் தகுதியையுடைய
தூபக்கால்களும், தீபக்கால் மணி இன்ன பிறவும் - தீபக்காலும் மணியும்
இவைபோல்வன பிறவும், ஈந்தோர் - கொடுத்தவர்கள், செய்த பாவம் -
தாங்கள் செய்த பாவங்களை, வெறும் துகள் செய்து - வெறுவிய பொடியாகச்
செய்து, ஐம்பொறிக்கும் விருந்து ஊட்டும் - ஐந்து இந்திரியங்களுக்கும்
விருந்துண்பிக்கும், பெருங்காம வெள்ளத்து ஆழ்வார் - பெரிய
இன்பவெள்ளத்துள் மூழ்குவார்கள் எ - று.

     தூபமும் தீபமும் இடுதற்குரிய கலன்கள் தூபக்கால், தீபக்கால் எனப்
பெறும். சிறிதும் பயனின்றாகச் செய்து என்பார் 'வெறுந்துகள் செய்து'
என்றார். காமம் என்றது இன்பத்தை. 'புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும்
போகம்பின்னும் புதிதாய்...... வளர்கின்றதே' என்பவாகலின் 'விருந்தூட்டும்'
என்றார். (28)

கயலிசையுங்* கண்ணுமைகோன் றிருமுன்னர்ப்
     பல்லியமுங் கல்லென் றார்ப்ப
இயலிசைய பாடலினோ டாடலிவை
     செய்விப்போ ரிறுமாப் பெய்திப்
புயயலிசைய வியங்கலிப்ப மூவுலகுந்
     தொழவரசாய்ப் பொலங்கொம் பாடுஞ்
செயலிசைய வணங்கனையா ராடரங்கு
     கண்டின்பச் செல்வத் தாழ்வார்.

     (இ - ள்.) கயல் இசையும் கண் உமைகோன் - கயலை ஒத்த
கண்களையுடைய அங்கயற்கண்ணியின் தலைவனாகிய சோமசுந்தரக்
கடவுளின், திருமுன்னர் - சன்னிதானத்தில், பல் இயமும் கல்என்று ஆர்ப்ப
- பல இயங்களும் கல்லென்று ஒலிக்க, இயல் இசைய பாடலினோடு -
இலக்கண வமைதியையுடைய பாடல்களோடு, ஆடல் இவை செய்விப்போர்
- ஆடலுமாகிய இவற்றைச் செய்விப்பவர்கள், இறுமாப்பு எய்தி - இறுமாந்து,
புயல் இசைய - முகிலை ஒக்க. இயம் கலிப்ப - இயம் ஒலிக்க, மூ உலகும்
தொழ அரசு ஆய் - மூன்றுலகங்களும் வணங்குமாறு அரசராகி, பொலம்
கொம்பு ஆடும் செயல் இசைய -


     (பா - ம்.) * கயலிசைய.