நாய்நம தெனநரி நமதெ னப்பிதா
தாய்நம தெனநமன் றனதெ னப்பிணி
பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோல்
ஆய்நம தெனப்படும் யாக்கை யாரதே. |
(இ
- ள்.) நாய் நமது என - நாய்கள் எம்முடையது எனவும், நரி
நமது என - நரிகள் எம்முடையது எனவும், பிதா தாய் நமது என -
தந்தையும் தாயும் எம்முடையது எனவும், நமன் தனது என - கூற்றுவன்
என்னுடையது எனவும், பிணிபேய் நமது என - நோய்களும்பேய்களும்
எம்முடையது எனவும், மனம்மதிக்கும்பெற்றிபோல்ஆய் - மனத்தால் கருதுந்
தன்மை போலாக, நமது எனப்படும் யாக்கை - நாமும் நம்முடையது எனக்
கருதப் படுகின்ற உடல், யாரது - யாருக்கு உரியது எ - று.
உயிர்
நீங்கிய பொழுதில் தமக்குணவாதல் கருதி நாய் நரிகள்
தமதென்னும்; உயிருள்ள பொழுதில் தமக்குப் பயன் படுதல் கருதித் தம்மால்
வந்ததென்னும் உரிமைபற்றித் தந்தை தாயர் தமதென்பர்; வருந்தும்
உரிமையால் சுற்றமும், பிணி பேய்களும் தமதென்னா நிற்கும்; யாம்
எமதென்பதும் சிறிது நாள் அதில் வசிக்கும் அத்துணை யுரிமைகொண்டே;
ஆகலின் அதனை எமக்கே யுரியதெனக் கோடல் அமையாதென்றவாறு. ஆய்
- ஆக : எச்சத்திரிபு. ஏ : அசை. (32)
விடம்பயி லெயிற்றர வுரியும் வீநுழை
குடம்பையுந் தானெனுங்* கொள்கைத் தேகொலாம்
நடம்பயில் கூத்தரி னடிக்கு மைவர்வாழ்
உடம்பையும் யானென வுரைக்கற் பாலதோ. |
(இ
- ள்.) நடம்பயில் கூத்தரின் - ஆடுகின்ற கூத்தர்களைப்போல,
நடிக்கும் ஐவர்வாழ் - நடிக்கின்ற ஐம்பொறிகள் வாழா நின்ற; உடம்பையும்
- உடலையும், யான் என - நான் என்று, உரைக்கற் பாலதோ - (உயிர்)
கூறும்பகுதியையுடையதாமோ (அங்ஙனம்கொள்ளின் அது), விடம்பயில் -
நஞ்சு தங்கிய, எயிற்று அரவு - பற்களையுடைய பாம்பு, உரியும் - தனது
தோலையும், வீ - பறவை, நுழை குடம்பையும் - தான் நுழைகின்ற
கூட்டையும், தான் எனும் கொள்கைத்து - தான் என்று கொள்ளும்
கொள்கையை யுடையதாம் எ - று.
குடம்பை
- கூடு. தானெனுங் கொள்கைத்தென்பது அரவோடும்
வீயோடும் தனித்தனி யியையும். ஐவர் என்பது உடம்பென்னுங் குறிப்பால்
பொறிகளை யுணர்த்திற்று; தொகைக் குறிப்பு : அழித்தற்கண் வந்த
திணைவழுவமைதி. உம்மை : இழிவு சிறப்பு. ஐகாரம் சாரியை
யெனக்கொண்டு உடம்பும் உரைக்கற்பாலதோ எனினுமாம். ஏ : தேற்றம்.
கொல், ஆம் : அசை. ஓ : எதிர்மறை. குடம்பை தனித் தொழிய என்னும்
குறளும், ஓம்பினேன் கூட்டை வாளா கூட்டமாயைவர்
வந்து கொடுந்தொழற்
குணத்த ராகி, ஆட்டுவார்க் காற்றகில் லேன் என்னும் திருநேரிசைகளும்
இங்கு நோக்கற் பாலன. (33)
(பா
- ம்.) * நானெனும்.
|