I


தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலம்319



     (இ - ள்.) இவ்வண்ணம் நகர் களிப்ப - இவ்வாறு நகரமெல்லாம்
மகிழ, இறைமகனும் களிப்பு எய்தி - மலையத்துவச பாண்டியனும் மகிழ்ச்சி
மிக்கு, இறைவர் சொன்ன அவ்வண்ணம் - இறைவர் அசரீரி யாக
அருளிச்செய்த அத் திருவாக்கின்படியே, சாதம் முதல் வினை நிரப்பி -
சாதகன்ம முதலாகிய சடங்குகளை முடித்து, தடாதகை என்று அழைத்து -
தடாதகை என்று பெயர்கூறி, தேவி - தன் தேவியாகிய காஞ்சனமாலை,
மெய்வண்ணம் மறை உணரா - உண்மைத் தன்மையையுடைய வேதங்களாலும்
அறியப்படாத, இறைவிதனை - தடாதகைப் பிராட்டியாரை, மேனைபோல் -
மேனையைப்போல், மேல் நாள் நோற்ற - முற்பிறப்பில் தவங்கிடந்த,
கைவண்ணத் தளிர் தீண்டி வளர்ப்ப - கைகளாகிய அழகிய தளிர்களால்
தொட்டு வளர்க்க, இமவான் போலக் களிக்கும் நாளில் - தான்
மலையரையன்போல மகிழுங் காலத்தில் எ - று.

     சாதம் - பிறப்பு; சாதகன்மம், மறை மெய்வண்ணமுணராத என்றுமாம்.
தேவி வளர்ப்ப இறைமகனும் களிக்கு நாளில். (31)

திருந்தாத விளங்குதலை யாயமொடு
     புறம்போந்து சிறார்க்குச் சிற்றில்
விருந்தாக மணற்சிறுசோ றட்டும்வரை
     யுரங்கிழித்த வேளும் வாய்வைத்
தருந்தாத விளமுலைவாய் வைத்தருந்தப்
     பாவைதனக் களித்தும் போதில்
வருந்தாதை யண்டமெலாஞ் சிற்றிலிழைப்
     பாளாய்க்கு மகிழ்ச்சி செய்தாள்.

     (இ - ள்.) திருந்தாத இளங்குதலை ஆயமொடு - திருத்தம் பெறாத
இளமையாகிய மழலைச் சொற்களையுடைய சிறுமிகளின் குழுவொடு,
புறம்போந்து - வீதிகளிற் சென்று, சிறு இல் - சிறு வீடு (அமைத்து), சிறார்க்கு
விருந்தாக மணல் சிறு சோறு அட்டும் - சிறுவர்களுக்கு விருந்தாகுமாறு
மணலால் சிறு சோறு சமைத்தும், வரை உரம கிழித்த வேளும் - கிரவுஞ்ச
மலையின் மார்பைப் பிளந்த முருகக் கடவுளும்; வாய்வைத்து அருந்தாத
-வாயினை வைத்து உண்ணப் பெறாத, இள முலை வாய் வைத்து அருந்த -
இளமையாகிய தனத்தில் வாய்வைத்து உண்ணுமாறு, பாவை தனக்கு
அளித்தும் - பாவைக்குக் கொடுத்தும், போதில் வரும் தாதை அண்டம்
எலாம் - தாமரை மலரில் தோன்றிய பிரமனுடைய அண்டங்களை யெல்லாம்,
சிற்றில் இழைப்பாள் - (நினைப்பளவில்) சிறுவீடாக இயற்றும் இறைவி,
ஆய்க்கு மகிழ்ச்சி செய்தான் - தன் தாயாகிய காஞ்சன மாலைக்குக் களிப்பை
உண்டாக்கினாள் எ - று.

     வேளும் : உம்மை உயர்வு சிறப்பு. வாய்வைத்தருந்தாமை உண்ணா
முலையாள் என்னும் பெயரானுமறிக. சோறடுதல் முதலியன பாவனை. பாவை
- மரப்பாவை முதலியன. தாதை - பிரமன்; பெயர். தாதையண்டம் -
பிரமாண்டம். சிற்றிலிழைத்தல்போல் அண்டங்களையெல்லாம் எளிதாகச்
செய்வான். ஆய், திரிபு : திசைச் சொல்லுமென்ப; சிறார் என்பதற்குச்
சிறுமியர் என்று பொருள் கூறுவாருமுளர்; அது சிறவாமை காண்க. (32)