I


682திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



     (இ - ள்.) அல்லி அம் பதுமம் - அகவிதழையுடைய அழகிய
செந் தாமரை மலரும், சாதி - சிறுசண்பக மலரும், அரத்தவாய் ஆம்பல் - சிவந்த வாயையுடைய ஆம்பன் மலரும், கோடல் - செங்காந்தண் மலரும்,
வல்லிசேர் மௌவல்போது - கொடியாய்ப் படர்ந்த மல்லிகையின் மலரும்,
நூறு இதழ்மரை - நூறு இதழ்களையுடைய வெண்டாமரை மலரும், காலேயம்
- மரமஞ்சள் மலரும், மெல் இதழ் கழுநீர் - மெல்லிய இதழையுடைய
நெய்தல் மலரும், பேழ்வாய் வெள்ளை மந்தாரம் - பிளந்த வாயையுடைய
வெள்ளை மந்தார மலரும், இன்ன - ஆகிய இம்மலர்களை, சொல்லிய
முறையால் வண்டு சூழத் தம் முடி மேல் சூடி - முன்னர்க் கூறிய
முறையினால் வண்டுகள் சூழத் தமது முடியிற் சூடி எ - று.

     அல்லி - அகவிதழ். மரை : முதற்குறை. முன்னே பதுமராகம்
முதலியவற்றைக் கூறிய முறையே அவற்றுக்கு உரியவாகக் கொண்டு
சூடி என்க. (50)

தலத்தினைச் சுத்தி செய்து தவிசினை யிட்டுத் தூய
நலத்துகில் விரித்துத் தெய்வ மாணிக்க நடுவே வைத்துக்
குலத்தமுத் தாதி யெட்டுங் குணதிசை முதலெண் டிக்கும்
வலப்பட முறையே பானு மண்டல மாக வைத்து.

     (இ - ள்.) தலத்தினைச் சுத்தி செய்து - நிலத்தைத் தூய்மை செய்து
தவிசினை இட்டு - ஆதனத்தை இட்டு, தூயநலம் துகில் விரித்து - அதன்
மேல் வெள்ளிய நன்மையாகிய ஆடையை விரித்து, தெய்வ மாணிக்கம்
நடுவே வைத்து - தெய்வத் தன்மை பொருந்திய மாணிக்கத்தை இடையில்
வைத்து, குலத்த முத்து ஆதி எட்டும் - சிறந்த முத்து முதலிய மணிகள்
எட்டினையும், குணதிசை முதல் எண் திக்கும் முறையே வலப்பட - கிழக்குத்
திக்கு முதல் எட்டுத் திக்குகளிலும் முறையே வலமாக, பானு மண்டலமாக
வைத்து - பரிதி மண்டலம் போல வைத்து எ - று.

     நலத்துகில் - நன்மையாகிய துகில் : பண்புத் தொகை. குலத்த -
சிறப்பினையுடைய : குறிப்புப் பெயரெச்சம். மண்டலமாக வலப்பட வைத்து
என்க. வலம்பட என்பது வலித்தலாயிற்று. வட்டமாகவென்பார் 'பானு
மண்டலமாக' என்றார். சூரிய மண்டிலம் சிவந்த கதிருடன் ஏனைக்
கதிர்களையும் உடையதாதலும் கொள்க. (51)

அன்புறு பதும ராக மாதியா மரத னங்கள்
ஒன்பதுங் கதிரோ னாதி யொன்பது கோளு மேற்றி
முன்புரை கமலப் போது முதலொன்பான் மலருஞ் சாத்தி
இன்புற நினைந்து பூசை யியன்முறை வழாது செய்தல்.

     (இ - ள்.) அன்பு உறு பதுமராகம் ஆதியாம் அராதனங்கள் ஒன்பதும்
- விருப்பமிக்க பதுமராகம் முதலாகிய ஒன்பதும் மணிகளின் மேலும்,
கதிரோன் ஆதி ஒன்பது கோளும் ஏற்றி - ஞாயிறு முதலிய ஒன்பது
கோட்களையுந் தாபித்து, முன்பு உரை கமலப்போது முதல் ஒன்பான் மலரும்
சாத்தி - முன்னே கூறிய தாமரை மலர் முதலிய ஒன்பது மலர்களையும்