|
(இ
- ள்.) வருவான் - அங்ஙனம் வரும் அம்மறையோன், உண் நீர்
வேட்டு வருவாளை - உண்ணும் நீரினை விரும்பி வந்த தன் மனைவியை,
வழிநிற்கும் பெருவானம் தடவும் ஒரு பேர் ஆலின் நீழலின் கீழ் - வழியில்
நிற்கின்ற பெரிய வானையளாவிய ஒரு பெரிய ஆலமரத்தின் நிழற் கீழே,
ஒருவாத பசுங் குழவியுடன் இருத்தி - நீங்காத இளங் குழந்தையோடும்
இருக்கச் செய்து, நீர் தேடித் தருவான் போய் - நீரினைத் தேடிக் கொண்டு
வரச் சென்று, மீண்டு மனை இருக்கும் இடம் தலைப்படுமுன் - (நீரினைக்
கொண்டு) திரும்பி மனைவியிருக்குமிடத்தை அடைதற்கு முன்.
வேட்டு
வருவாள் என்றது வேட்கையுற்ற பொழுதே பருகுதற்கு நீரின்றி
வந்து கொண்டிருப்பவள் என்றவாறு. ஒருவாத பசுங்குழவி - சிறிதும் விட்டுப்
பிரியாத பச்சைக் குழந்தை; பசுமை - மிக்க இளமையைக் குறிப்பது. தருவான் :
வினையெச்சம். மனை : ஆகு பெயர். (7)
இலைத்தலைய பழுமரத்தின் மிசைமுன்னா ளெய்ததொரு
கொலைத்தலைய கூர்வாளி கோப்புண்டு கிடந்ததுகால்
அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த
வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால். |
(இ
- ள்.) இலைத் தலைய பழுமரத்தின் மிசை - இலைகள்
பொருந்திய தலையையுடைய அந்த ஆலமரத்தின் மேல், முன்னாள்
எய்தது - முன்னொரு நாளில் (ஒரு வேடனால்) எய்யப் பெற்றதாய்,
கோப்புண்டு கிடந்தது ஒரு கொலைத்தலைய கூர்வாளி -
கோக்கப்பட்டுக் கிடந்த கொலைத் தொழிலைத் தன்னிடத்தேயுடைய
ஒரு கூரிய வாளியானது, கால் அலைத்து அலைய வீழ்ந்து - காற்றினால்
அலைக்கப்பட்டு மரம் அசைதலால் விழுந்து, உம்மைவினை உலப்ப -
முன்வினைப் பயன் முடிய, ஆங்கு இருந்த வலைத்தலைய மான் நோக்கி
வயிறு உருவத்தைத்தன்று - அங்கே தங்கியிருந்த வலையில் அகப்பட்ட
மான் போன்ற கண்ணையுடைய பார்ப்பனியின் வயிற்றிலே ஊடுருவத்
தைத்தது.
தலைய
என்பன குறிப்புப் பெயரெச்சம். பழுமரம் - ஆலமரம். எய்தது,
கிடந்தது என்பவற்றை முறையே வினையெச்சமும் பெய்ரெச்சமுமாக்குக.
கொலை செய்யும் கூரியய நுதியையுடைய வாளி என்றலுமாம். அலைத்து -
அலைக்கப்பட்டு; கடுங்காற்று வீசிற்றென்பது அலைத்தல் என்னும்
சொல்லாற்றலாற் பெறப்படும். மரம் அலைதலால் என்க. உம்மை வினை -
வாழ்நாட்கு அலகாகிய முன் வினை. உலத்தல் - முடிதல். வலைத்தலைய -
வலையினிடத்துள்ள; மருட்சியைக் குறித்தற்கு 'வலைத்லைய மான்' என்றார்.
தைத்தன்று - தைத்தது; அன் : சாரியை. ஆல் : அசை. (8)
அவ்வாறவ் வணங்கனையா ளுயிரிழந்தா ளவ்வேலைச்
செவ்வாளி யேறிட்ட சிலையுடையா னொருவேடன்
வெவ்வாளி யேறனையான் வெயிற்கொதுங்கு நிழறேடி
அவ்வால நிழலெய்தி யயனின்றா னிளைப்பாற. |
|