|
கைதவன்
என்றது வேடுவனென்னும் பொதுமை குறித்தது. இவன்
கொன்றிலனென்று துணிதலும் அரிதென்பான் 'கைதவனா மிக்கா
னவனேயோ' என்றான். ஏகாரங்கள் இசை நிறைக்க வந்தன. தான், ஆல் :
அசை. (28)
என்னா முன்னித்
தென்னவ னின்ன மிதுமுன்னூல்
தன்னா லாயத் தக்கதை யென்றான் றகவிற்றன்
அன்னா ரந்நூ லாய்ந்திது நூலா லமையாதால்
மன்னா தெய்வத் தாலே தேறும் வழியென்றார். |
(இ
- ள்.) என்னா தென்னவன் முன்னி - என்று பாண்டியன்
நினைத்து, இன்னம் இது முன்னூல் தன்னால் ஆயத் தக்கது என்றான் -
இன்னும் இது அற நூலால் ஆராய்ந்து தெளியத் தக்கது என்றான்; தகவில்
தன் அன்னார் அந்நூல் ஆய்ந்து - தகுதியில் தன்னையொத்தவர்களாகிய
அமைச்சர்கள் அவ்வற நூலை ஆராய்ந்து, மன்னா - வேந்தனே, இது
நூலால் அமையாது - இது நூலாராய்ச்சியாலே தெளியத்தக்கதன்று;
தெய்வத்தாலே தேறும் வழி என்றார் - தெய்வத்தினாலே தெளியும்
நெறியினையுடையது என்றார்கள்.
முன்னூல்
- தொன்மையாகிய நூல். தக்கதை, ஐ : சாரியை : அரசன்
எவ்வளவு தகுதி யுடையனோ அவ்வளவு தகுதியுடைய ரென்பார் 'தகவிற்
றன்னன்னார்' என்றார். தன்னன்னார் - புரோகிதருமாம். ஆராய்ந்து,
அறியலாகாமையால், இது நூலாலமையாது தெய்வத்தாலே தேறும்
வழியென்றா ரென்க. ஆல் : அசை. தேறும் வழி - தெளியும் வழியினை
யுடையது; தெய்வத்தின் வழியாற் றெளியற்பாலதென்பது. (29)
வேந்தர்கள்
சிங்கம் வேதிய னைப்பார்த் திதுதீர
ஆய்ந்துன துள்ளக் கவலை யொழிப்பே னஞ்சேனின்
ஏந்திழை யீமக் கடனிறு விப்போ தென்றேவித்
தேந்துணர் வேங்கைத் தார்மற வோனைச் சிறைசெய்தான். |
(இ
- ள்.) வேந்தர்கள் சிங்கம் - (அதனைக் கேட்ட) மன்னர்களுட்
சிங்கம் போன்ற பாண்டியன், வேதியனைப் பார்த்து - மறையவனை நோக்கி,
இது தீர ஆராய்ந்து உனது உள்ளக் கவலை ஒழிப்பேன் - இதனை நன்கு
ஆராய்ந்து உன் மனக் கவலையைப் போக்குவேன்; அஞ்சேல் - நீ அஞ்சற்க;
நின் ஏந்திழை ஈமக்கடன் நிறுவிப் போது என்று ஏவி - நின் மனைவியின்
ஈமக் கடன்களை முடித்து வருக என்று போக்கி, தேம்துணர் வேங்கைத் தார்
மறவோனைச் சிறை செய்தான் - தேன் சிந்தும் பூங்கொத்துக்களையுடைய
வேங்கை மலர் மாலையையணிந்த வேடனைச் சிறைப்படுத்தினான்.
பகை
வேந்தர்களாகிய யானைகளுக்கு ஆண் சிங்கம் போன்றவன்
என்றுமாம். ஏந்திழை : அன்மொழித்தொகை. போது - புகுது; வா, இப்போது
என்று பிரிக்கலாமெனினும், வருகவென்று கூறல் வேண்டுமாகலின் இது
சிறப்பின்று. வேங்கையின் துணர்த்தார் என்று கூட்டலுமாம். (30)
|