II


178திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     ஆவை யூறு செய்யார் எனக் கருதினராகலின் அவர் எண்ணி யாங்கே
என்றார். ஊற்றம் - ஊறு. ஆரிய விடை - அரிய விடையென்றும், குரவுத்
தன்மையுடைய விடையென்றும் உரைத்தலுமாம். வீரியத்துடன் ஆவியை
விடுத்தென்க. அன்று, ஏ : அசைகள். (21)

வாங்கின புரிசை மாட மாநக ரானா வின்பந்
தூங்கின வரவாய் வேம்பின் றோடவிழ் தாரான் றிண்டோள்
வீங்கின விரவி தோன்ற வீங்கிரு ளுடைந்த தென்ன
நீங்கின நாண மோடு நிரையமண் குழாங்க ளெல்லாம்.

     (இ - ள்.) வாங்கின புரிசைமாட மாநகர் - வளைந்த மதிலையுடைய
மாடங்கள் நிறைந்த பெரிய மதுரைப்பதி முழுதும், ஆனா இன்பம் தூங்கின
- நீங்காத இன்பத்தில் அழுந்தின; அரம் வாய் வேம்பின் தோடு அவிழ்
தாராள் திண் தோள் வீங்கின - அரம்போல இரு புறத்தும் வாயுள்ள
இலைகளையுடைய வேம்பின் இதழ் விரிந்த மாலையையுடைய அனந்தகுண
பாண்டியனின் திண்ணிய தோள்கள் பூரித்தன; இரவி தோன்ற வீங்கு இருள்
உடைந்தது என்ன - பரிதி உதித்த காலை செறிந்த இருள் சிதைந்தாற்போல,
நிரை அமண் குழாங்கள் எல்லாம் நாணமோடு நீங்கின - வரிசை
வரிசையாயுள்ள சமணக் கூட்டங்களனைத்தும் நாணத்துடன் புறங்கொடுத்
தோடின.

     நகரிலுள்ளா ரனைவரும் என்பார் 'நகர்' என்றார். அரம் - வாளரம்;
இவ்வுவமம் பழஞ் செய்யுட்களிற் பயின்றுளது. நாணம் - வெள்குதல்; நாணும்
நீங்கிற்று அவர்களும் நீங்கினர் எனலுமாம். (22)

உலகறி கரியாத் தன்பே ருருவினை யிடபக் குன்றாக்
குலவுற நிறுவிச் சூக்க வடிவினாற் குறுகிக் கூடற்
றலைவனை வணங்க வீசன் றண்ணருள் சுரந்து பண்டை
இலகுரு வாகி யிங்ங னிருக்கென விருத்தி னானே.

     (இ - ள்.) உலகு அறி கரியா - உலகத்தார் அறியுஞ் சான்றாக, தன்
பேர் உருவினை இடபக் குன்றாக் குலவுற நிறுவி - நந்தி தனது பெரிய
வடிவினை இடப மலையாக விளங்க நிறுத்தி, சூக்க வடிவினால் கூடல்
தலைவனைக் குறுகி வணங்க - நுண்ணிய வடிவினோடு மதுரை நாயகனை
அடைந்து வணங்க, ஈசன் தண் அருள் சுரந்து - அவ் விறைவன் தண்ணிய
கருணை சுரந்து, பண்டை இலகு உருவு ஆகி இங்ஙன் இருக்க என
இருத்தினான் - முன்னைய விளங்கிய வடிவமாகி இங்கு இருப்பாயாகவென்று
இருத்தியருளினான்.

     இந்நிகழ்ச்சியை உலகினர் அறியுஞ் சான்றாகவென்க. பேருரு -
தூலவடிவம். சூக்கம் - சூக்குமம்; நுண்மை. இருக்கென : அகரந் தொகுத்தல்.
(23)