II


மெய்க்காட்டிட்ட படலம்189



எண்ணிறந்த களிப்பினொடுந் திருக்கோயி லிடத்தணைந்து
கண்ணிறைந்த பொன்முளரிக் கயந்தலைநீர் படிந்துதன
துண்ணிறைந்த மெய்யன்பி னொளியுருவாய் முளைத்தெழுந்த
பண்ணிறைந்த மறைப்பொருளை பணிந்திறைஞ்சி
                                     யிதுவேண்டும்.

     (இ - ள்.) எண் இறந்த களிப்பினொடும் - அளவிறந்த
மகிழ்ச்சியோடும், திருக்கோயில் இடத்து அணைந்து - திருக்கோயிலுட்
சென்று, கள் நிறைந்த பொன் முளரிக் கயந்தலை நீர் படிந்து - தேன்
நிறைந்த பொற்றாமரை வாவியில் நீராடி, தனது உள் நிறைந்த மெய்
அன்பின் - தனது உள்ளத்தின்கண் நிறைந்த உண்மையன்பினாலே, ஒளி
உருவாய் முளைத்து எழுந்த - ஒளி வடிவாய்த் தோன்றியருளிய, பண்
நிறைந்த மறைப்பொருளை பணிந்து இறைஞ்சி - இசை நிறைந்த வேதப்
பொருளாகிய சோமசுந்தரக் கடவுளைக் கும்பிட்டு வணங்கி, இது வேண்டும்
- இதனை வேண்டுவானாயினன்.

     கண் நிறைந்த எனப் பிரித்துக் கண்ணுக்கு நிறைந்த பொலிவினையுடைய முளரி என்றுரைத்தலுமாம். கயந்தலை : மெலிந்து நின்றது. அன்பினது
ஒளியுருவாய் முளைத்தெழுந்த பொருளை என்றுரைப்பாருமுளர். பணிந்து
இறைஞ்சி என்பன வணங்கியென்னும் ஒரு பொருள் குறித்தனவுமாம். (7)

பண்ணியனான் மறைவிரித்த பரமேட்டி யெங்கோமான்
எண்ணியகா ரியமுடிப்பா யிவையுனக்கு முன்னடிக்கீழ்
அண்ணியமெய் யடியவர்க்கு மாதக்க வெனவிரந்தப்
புண்ணியமா நிதிமுழுது மவ்வழியே புலப்படுவான்.

     (இ - ள்.) பண் இயல் நான்மறை விரித்த பரமேட்டி - இசை அமைந்த
நான்கு மறைகளையும் வெளிப்படுத்த பரமேட்டியே, எம்கோமான் -
எம்பெருமானே, எண்ணிய காரியம் முடிப்பாய் - அடியார் கருதிய
கருமங்களை முடித்தருளுபவனே, இவை - இப்பொருள்கள், உனக்கும் -
நினக்கும், உன் அடிக்கீழ் அண்ணிய மெய் அடியவர்க்கும் ஆதக்க - நின்
திருவடிக்கீழ்ப் பொருந்திய உண்மையடியார்க்கும் ஆகக்கடவன; என இரந்து
- என்று வேண்டி, அப்புண்ணியமா நிதி முழுதும் அவ்வழியே புலப்படுப்பான்
- அந்த அறத்தாற்றின் வந்த பெரிய நிதி முழுதையும் அந்நெறியிலேயே
செலுத்துவானாயினன்.

     பரமேட்டி - மேலோன்; எங்கோமான் எண்ணிய காரிய முடிப்பாய்
என்பதற்கு எம் அரசன் நினைத்த காரியத்தை முற்றிவிப்பாய் என்றுரைத்தலும்
பொருந்தும். ஆதக்க - ஆகத் தக்கன; முதனிலை வினையெச்சப்
பொருட்டாய் நின்றது; "செய் தக்க" என்புழிப்போல. செலவிடுதலைப்
புலப்படுத்தல் என்றார். அதன் பயன் நின்று விளங்குதலின். (8)