|
தேசன்
- ஒளியுருவன்; ஆதித்தன். உலகு என்பது ஈண்டு உயிர்
என்னும் பொருட்டு. வாசவாதி : தீர்க்க சந்தி. (27)
எம்மை யுணர்ந்த
யோகியர்க் ளிவற்றை விரும்பா ரெனினுமவர்
தம்மை நிழல்போ லடைந்துலகர்க் கனையார் பெருமை
தனையுணர்த்தும்
செம்மை யுடைய விவையென்னச் சித்தி யெட்டுந் தெளிவெய்தக்
கொம்மை முலையா ரறுவருக்குங் கொளுத்தி னானெண்
குணச்செல்வன்.
|
(இ
- ள்.) எம்மை உணர்ந்த யோகியர்கள் - எம்மை யறிந்த
சிவயோகியர், இவற்றை விரும்பார் எனினும் - இச் சித்திகளை விரும்பா
ராயினும், அவர் தம்மை நிழல்போல் அடைந்து - அவர்களை உடம்பின்
நிழல்போலத் தொடர்ந்து, உலகர்க்கு அனையார் பெருமைதனை உணர்த்தும்
செம்மையுடைய இவை என்ன - உலகினருக்கு அவர் பெருமையை
அறிவிக்கும் தகுதியை யுடையனவாம் இச் சித்திகள் என்று, சித்தி எட்டும்
தெளிவு எய்த - அவ்வெண் சித்திகளையும் தெளிவுபட, கொம்மை முலையார்
அறுவருக்கும் - திரண்ட கொங்கை களையுடைய மகளிர் அறுவருக்கும்,
எண்குணச் செல்வன் கொளுத்தினான் - எட்டுக் குணங்களாகிய
செல்வத்தினையுடைய இறைவன் அறிவித்தான்.
சிவஞானச்
செல்வமுடைய பெரியார் இச்சித்திகளை விரும்பா ராதலை,
"இந்திரச் செல்வமு
மெட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கி" |
என்று பட்டினத்ததடிகள்
கூறுமாறு காண்க. செம்மையுடைய இவை
உணர்த்தும் என முடித்தலுமாம். (28)
|
[-
வேறு]
|
தேவதே
வுபதே சித்த சித்தியைச் சிலம்பன் செல்வி
பாவனை வலத்தா னன்கு பயின்றுவான் வழிக்கொண் டேகிப்
பூவலர் கதுப்பி னல்லா ரறுவரும் புரமூன் றட்ட
காவலன் விரும்பி வைகுங் கயிலைமால் வரையிற் புக்கார். |
(இ
- ள்.) பூ அலர் கதுப்பின் நல்லார் அறுவரும் - மலர்கள் நிறைந்த
கூந்தலையுடைய மகளிரறுவரும், தேவதே உபதேசித்த சித்தியை - தேவ
தேவனாகிய சோமசுந்தரக்கடவுள் உபதேசித்தருளிய அட்டமாசித்தியையும்,
சிலம்பன் செல்வி பாவனை வலத்தால் நன்கு பயின்று - மலையரையன்
புதல்வியாகிய உமையம்மையின் தியான வலியால் நன்றாகப் பயின்று, வான்
வழிக்கொண்டு ஏகி - வான் வழியாற் சென்று, புரம் மூன்று அட்ட காவலன்
விரும்பி வைக்கும் - திரிபுரங்களை எரித்த இறைவன் விரும்பி வீற்றிருக்கும்,
கயிலை மால் வரையில் புக்கார் - கைலை என்னும் பெரிய மலையிற்
புகுந்தனர்.
|