II


தண்ணீர்ப்பந்தல் வைத்த படலம்267



கன்னி நாட்டு மன்னனாகிய பாண்டியனது, சிலை சிறந்த சிறிய சேனை
சென்று அலைத்து நின்றது - விற்போரிற் றலைசிறந்த சிறியதாகிய சேனை
சென்று வருத்தி நின்றது.

     சிறத்தல் - மிகுதல், மேம்படுதல். சோழன் சேனையின் பெருமையும்
பாண்டியன் சேனையின் சிறுமையும் தோன்றக் கடலின்மேல் ஆறு
செல்லுமாறுபோல் என உவமை கூறினார். மள்ளர் - வீரர். கலை சிறந்த மதி
நிறைந்த என்னும் அடை நாட்டிற்கும் காவலானுக்கும் பொருந்தும். (13)

[அறுசீரடியாசிரியவிருத்தம்]
உருமு வன்ன குரலினா ருலவை யன்ன செலவினார்
வெருவு தீயின் வெகுளியார் வெடித்த வீர நகையினார்
செருவின் மான வணியினார் சினைஇ மடித்த வாயினார்
இருவர் சேனை மள்ளரும் மெதிர்ந்து கைக லந்தனர்.

     (இ - ள்.) உருமு அன்ன குரலினார் - இடிபோன்ற குரலினை
யுடைய வரும், உலவை அன்ன செலவினார் - காற்றினைப் போன்ற
கடிய செலவினையுடையவரும், வெருவு தீயின் வெகுளியார் - அஞ்சப்படும்
தீப்போன்ற சினமுடையவரும், வெடித்த வீர நகையினார் - வெடிப்புடன்
தோன்றிய வீர நனையினை உடையவரும், செருவில் மான அணியினார் -
போரின்கண் மானமாகிய அணியினை யுடையவரும், சினைஇ மடித்த
வாயினார் - சினந்து மடித்த வாயினை யுடையவருமாகிய, இருவர் சேனை
மள்ளரும் எதிர்ந்து கை கலந்தனர் - இருவர் படை வீரரும் நேர்ந்து
போர்புரியத் தொடங்கினர்.

     இருதிறத்து வீரரும் ஒரு பெற்றியே ஆற்றலும் தறுகண்மையு
முடையராய் எதிர்ந்தமை கூறினார். வெடித்தல் - ஒலியுடன் புறப்படுதல்.
சினைஇ : சொல்லிசை யளபெடை. கை : துணைமொழி. குரலினார் முதலியன
வினையெச்சப் பொருளன. (14)

மன்ற லந்தெ ரியனேரி மலைய வன்ற மர்க்கெலாந்
தென்ற லம்பொ ருப்பினான் றிரண்ட நான்கு கருவியும்
மின்ற யங்கு செய்யவேணி விடைய வன்ற னருளினால்
ஒன்ற னந்த மாகவந் துருத்தெ திர்ந்து தோன்றுமால்.

     (இ - ள்.) மன்றல் அம் தெரியல் நேரி மலையவன் தமர்க்கு எலாம் -
மணம் பொருந்திய அழகிய மாலையை யணிந்த நேரி மலையையுடைய
சோழன் படை வீரர்கட் கெல்லாம், தென்றல் அம் பொருப்பினான் -
தென்றலுக்கிடமாகிய அழகிய பொதியின் மலையையுடைய பாண்டியனது,
திரண்ட நான்கு கருவியும் - திரண்ட நால்வகைப் படையும், மின்தயங்கு
செய்ய வேணி விடையவன் தன் அருளினால் - மின்போல விளங்குஞ் சிவந்த
சடையையும் இடபவூர் தியையுமுடைய சோமசுந்தரக் கடவுளின் திருவருளால்,
ஒன்று அனந்தமாக உருத்துவந்து எதிர்ந்து தோன்றும் - ஒன்று
அளவில்லவாகஉருக்கொண்டு வந்து எதிரே தோன்றா நிற்கும்.