II


290திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) மங்கைபாகரை - அங்ஙனங் கூறியருளிய உமை பாகராகிய
சிவபெருமானை, மடந்தையும் - பொன்னனையாளும், இங்கு நீர் வதிந்து -
இங் நீர் தங்கி, கங்குல்வாய் அமுது அருந்தி - இரவிற் றிருவமுதுசெய்து,
இக்காரியம் முடித்து - இவ்வினையையும் முடித்து, பொங்குகார் இருள்
புலருமுன் போம் எனப் புகன்றாள் - மிக்க கரிய இருள் விடியுமுன்
போவீராகஎன்று வேண்டினள்; அங்கயற்கணாள் தனைப் பிரியார் - அங்கயற்
கண்ணம்மையைப் பிரியாதவராகிய இறைவர், அதற்கு இசையார் - அதற்கு
உடன்படாமல்.

     என்னுடன் கலந்து செல்லும் என்பதனை இடக்க ரடக்கலாக ‘இங்குநீர்
வதிந்து . . . . . . போம்’ என்றாளென்க. கங்குல்வாய் அமுதருந்தி என்பதற்கு
இரவின்கண் அடிசில் உண்டு என்றும். இரவில் என் வாயிலுண்டாகும்
‘வாலெயி றூறிய நீர்’ ஆகி அமுதினை யுண்டு என்றும் சிலேடைப்பொருள்
கொள்க. இக்காரியம் - உலோகங்களைப் பொன்னாக்கும் காரியம். நீர்
என்னுடன் அணைந்தமையைப் பிறர் அறிதலால் நுமக்குப் பழியுண்டாகாதவாறு செல்லும் என்பாள் ‘காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள்’ என்க. ஒரு
காதலியைப் பிரியாதுறையும் இயல்பினர் மற்றொருத்தியைக் கூடுதல்
அரிதென்பார் ‘அங்கயற் கணாள் தனைப்பிரியார் அதற்கிசையார்’ என்றார்.
இறைவன் அருளாகிய சத்தியைப் பிரியாமை யுணர்க. பிரியார் : பெயர்.
இசையார் : முற்றெச்சம். (25)

சிறந்த மாடநீண் மதுரையிற் சித்தர்யா மென்று
மறைந்து போயினார் மறைந்தபின் சித்தராய் வந்தார்
அறைந்த வார்கழ லலம்பிட வெள்ளிமன் றாடி
நிறைந்த பேரொளி யாயுறை நிருத்தரென் றறிந்தாள்.

     (இ - ள்.) சிறந்த மாடம் நீள் மதுரையில் சித்தர் யாம் என்று -
சிறப்புடைய மாடங்கள் உயர்ந்த மதுரையில் வசிக்குஞ் சித்தர் யாம் என்று
கூறி, மறைந்து போயினார் - மறைந்து சென்றனர்; மறைந்தபின் - (அங்ஙனம்
அவர்) மறைந்தருளியவின், சித்தராய் வந்தார் - இங்குச் சித்தசாமியாய்
வந்தவர், அறைந்த வார்கழல் அலம்பிட - (பலரும்) புகழும் நீண்ட வீரக்கழல்
ஒலிக்க வெள்ளிமன்று ஆடி - வெள்ளியம் பலத்திலே திருக்கூத்தாடி, எங்கும்
நிறைந்தபேர் ஒளியாய் உறை நிருத்தர் என்று அறிந்தாள் - எங்கும் நிறைந்த
பெரிய ஒளிவடிவாய்த் தங்கிய திருக்கூத்தர் என்று உணர்ந்தனள்.

     அறைந்த - ஒலிக்கின்ற என்றுமாம். வந்தவர் வெள்ளிமன்றிலே ஆடி
உறையும் நிருத்தரென் றறிந்தாள் என முடிக்க. மதுரையிற் சித்தர் என்று
கூறி மறைந்த குறிப்பால் இங்ஙன் அறிந்தாள் என்க. (26)

மறைத்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தில்
நிறைந்த தோர்பெருங் கவற்சியை நீக்கினா ரென்னச்
சிறந்த தோர்பெரு மகிழ்ச்சியு முடையளாய்ச் சித்தர்
அறைந்த வாறுதீப் பெய்தன ளுலோகங்க ளனைத்தும்.