II


308திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கொடுப்பா ரவரே விளைவுக்கடன் கோளு மாற்றித்
தடுப்பா ரெனின்மற் றதையாவர் தடுக்க வல்லார்
அடுப்பார் விழுமங் களைவாரடி யார்க்கு நல்லூண்
மடுப்பா னியமந் தடைப்பட்டு வருந்து கின்றான்.

     (இ - ள்.) கொடுப்பார் அவரே கொடுக்கின்ற இறைவரே, விளைவும்
கடன் கோளும் மாற்றித் தடுப்பார் எனில் - விளைவையுங் கடன்
கோடலையும் மாற்றி விலக்குவாராயின், அதை யாவர் தடுக்க வல்லார் -
அதனை தடுக்க வல்லவர் யாவர் (ஒருவருமில்லை; அதனால்), அடுப்பார்
விழுமம் களைவார் அடியார்க்கு - தம்மை அடுத்தவரின் துன்பத்தைப்
போக்கும் சிவபிரான் அடியார்க்கு, நல் ஊண் மடுப்பான் - நல்ல
உணவுகளை அளிக்கும் அடியார்க்கு நல்லான், நியமம் தடைப்பட்டு
வருந்துகின்றான் - அந்நியமம் தடைப்பட்டு வருந்துகின்றனன்.

     கோள் : முதனிலை திரிந்த தொழிற்பெயர். மற்று : அசை : யாவர்
தடுக்க வல்லார் என்றது கவிக்கூற்று. விழுமம் - துன்பம். நியமம்
உணவளித்தலாகிய கடன். (8)

விண்ணாறு சூடும் விடையான்றமர்க் கூட்டி யன்றி
உண்ணாத வன்றன் னுயிர்க்குத்துணை யாய* கற்பிற்
பண்ணார்மொழி தன்னொடும் பட்டினி விட்டு நெஞ்சம்
புண்ணாக வாகம் பசித்தீயிற் புழுங்கப் பட்டான்.

     (இ - ள்.) விண் ஆறு சூடும் விடையான் தமர்க்கு - ஆகாய
கங்கையை அணிந்த இடபவூர்தியையுடைய சிவபெருமான் அடியார்கட்கு,
ஊட்டி அன்றி உண்ணாதவன் - திருவமுது செய்வித்தல்லாமல் உண்ணுதல்
இல்லாத அடியார்க்கு நல்லான், தன் உயிர்க்குத் துணையாய - தனது
உயிர்க்குத் துணையாகிய, கற்பின் பண் ஆர் மொழி தன்னொடும் பட்டினி
விட்டு - கற்பினையும் இசை போலுஞ் சொல்லையுமுடைய மனைவியோடும்
பட்டினி கிடந்து, நெஞ்சம் புண்ணாக - மனம் புண்ணாக, ஆகம் பசித் தீயில்
புழுங்கப்பட்டான் - உடம்பு பசி என்னும் நெருப்பினால் வெதுபப்பட்டான்.

     ஊட்டியன்றி உண்ணாதவன் - உண்பித்து மிச்சிலை அருந்துவதன்றி
வேறுண்ணாத நியமமுடையான். பண்ணார் மொழி : ஆகுபெயர். விட்டு -
இருந்து, கிடந்து. (9)

இறக்கும் முடம்பாற் பெறும்பேறினி யாவ தென்னா
அறக்குன் றனையான் மனையோடு மடைந்திச் செய்தி
நிறக்கின்ற செம்பொற் சிலையார்க்கு நிகழ்த்தி யாவி
துறக்கின் றதுவே துணிவென்று துணிந்து போனான்.

     (பா - ம்.) (உயிர்த்துணையாய.)