II


318திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



அப்பொருள்களனைத்தையும், வன்மையால் வௌவிக் கொண்டார் - தங்கள்
வலியினாலே கவர்ந்து கொண்டார்கள்.

     என் முன் நல்கிப் போயினான் பின் தாயத்தார் வௌவிக் கொண்டனர்
என்க. (9)

ஒருத்திநா னொருத்திக் கிந்த வொருமக னிவனுந் தேருங்*
கருத்திலாச் சிறியன் வேறு களைகணுங் காணே னைய
அருத்திசா லறவோர் தேறு மருட்பெருங் கடலே யெங்கும்
இருத்திநீ யறியாய் கொல்லோ வென்றுபார் படிய வீழ்ந்தாள்.

     (இ - ள்.) ஐய - ஐயனே, ஒருத்தி நான் - நானோ யாருமற்ற ஒருத்தி,
ஒருத்திக்கு இந்த ஒரு மகன் - ஒருத்தியாகிய எனக்கு இவன் ஒரே புதல்வன்,
இவனும் தேரும் கருத்து இலாச் சிறியன் - இவ்வொரு புதல்வனும் நன்மை
தீமைகளை ஆராயுங் கருத்து இல்லாத இளைஞன்; வேறு களைகணும்
காணேன் - வேறு பற்றுக் கோடும் காணேன்; அருத்திசால் அறவோர்தேறும்
அருள் பெருங் கடலே - அன்பு நிறைந்த முனிவர்கள் தெளியும் பெரிய
கருணைக் கடலே, நீ எங்கும் இருத்தி - நீ யாண்டும் இருப்பாய்; அறியாய்
கொல்லோ என்று - (ஆதலின் இதனை) அறியாயோ என்று, பார் படிய
வீழ்ந்தாள் - நிலம்படியய வீழ்ந்தனள்.

     தேறும் கருத்து என்பது பாடமாயின் தெளியும் கருத்தென்றுரைக்க.
ஒருத்தியென்றதனாலும் வேறு களைகணும் காணேன் என்றதனாலும் இவட்குக்
கணவனும், வேறு துணையாகும் சுற்றத்தாரும் இலரென்பது பெற்றாம். அருத்தி
- ஆர்வம், அன்பு. கொல் அசை நிலை. (10)

மாறுகொள் வழக்குத் தீர்க்க வல்லவ ரருளி னாலே
சீறுகொள் வடிவேற் கண்ணாள் சிறுதுயி லடைந்தாள் மெய்யில்
ஊறுகொள் கரண மைந்து முற்றறி கனவிற் கங்கை
யாறுகொள் சடையார் வேதச் செல்வரா யடுத்துச் சொல்வார்.

     (இ - ள்.) மாறுகொள் வழக்குத் தீர்க்க வல்லவர் அருளினால் -
மாறுபட்ட கொடிய வழக்கினைத் தீர்க்க வல்ல பெருமானது திருவருளினால்,
சீறுகொள் வடிவேல் கண்ணாள் சிறுதுயில் அடைந்தாள் - சினங்கொண்ட
வடித்த வேல்போலுங் கண்களையுடையவள் சிறிய உறக்கங் கொண்டனள்;
மெய்யில் ஊறுகொள் கரணம் ஐந்தும் உற்று அறி கனவில் - உடலின்கட்
பொருந்திய ஐம்பொறிகளும் ஒடுங்கி நிற்க (ஆள்மாவானது சூக்கும
உடம்பினின்று) அறியும் கனவின்கண், கங்கை ஆறுகொள் சடையார் -
கங்கையாற்றையணிந்த சடையினையுடைய இறைவர், வேதச் செல்வராய்
அடுத்துச் சொல்வார் - ஓர் அந்தணராய் வந்து கூறுகின்றார்.

     ஊறுகொள் - உறுதலைக் கொண்ட, பொருந்திய. உற்று - ஒடுங்கி
நிற்க; எச்சத்திரிபு. கனவின் இயல்பினை "பொறிகளும் தமது சத்தி மடங்கி,
அவை மடங்கவே, அவற்றின் வழியவாகிய வாக்காதிகளும் தமது சத்தி