என்றனள் மறித்த லோடு மிழுக்குரை யாடி வைது
வன்றிறல் வலியார் தள்ளி யடித்தனர் மைந்த னோடுஞ்
சென்றனண் முறையோ வென்னாத் திருந்தறத் தவிசி னோர்முன்
நின்றுரை யாடி னாள்கேட் டறிந்தனர் நீதி நூலோர். |
(இ
- ள்.) என்றனள் மறித்தலோடும் - என்று கூறி (அவர் செலவைத்)
தடுத்தவளவில், வன்றிறல் வலியார் - மிக்க வலியுடைய ஞாதியர், இழுக்கு
உரை ஆடி வைது தள்ளி அடித்தனர் - தீய சொற்களைக் கூறி வைது
நிலத்திற் றள்ளி அடித்தார்கள்; மைந்தனோடும் சென்றனள் - (அவள்)
புதல்வனோடுஞ் சென்று, முறையோ என்னா - இது முறையோ என்று கூவி, திருந்து அறத்தவிசினோர்
முன் நின்று உரையாடினாள் - திருந்திய தரும
பீடத்துள்ளார் முன் நின்று வழக்கினைக் கூறினாள்; நீதி நூலோர் கேட்டு
அறிந்தனர் - நீதி நூல் வல்ல மன்றத்தார் அதனைக் கேட்டறிந்தனர்.
என்றனள்,
சென்றனள் என்பன முற்றெச்சம். வன்றிறல். ஒரு பொருட்
பன்மொழி. திருந்துதல் - சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து
ஒருபாற் கோடாதிருத்தல். (16)
அறத்தவி சிருப்போ ரேவ லாடவ ரோடும் போந்து
மறித்தவைக் களத்திற் கூட்டி வந்தனள் வந்த வெல்லை
அறக்கொடி பாகர் வெள்ளி யம்பல வாணர் தாமத்
திறத்தன பதியே யென்னத் திருவுருக் கொண்டு செல்வார். |
(இ
- ள்.) அறத் தவிசு இருப்போர் - தரும பீடத்தில் இருப்
போருடைய, ஏவல் ஆடவரோடும் போந்து - ஏவலாளரோடுஞ் சென்று,
மறித்து அவைக் களத்தில் கூட்டி வந்தனள் - மறித்து மன்றின்கண்
(அஞ்ஞாதிகளைக்) கூட்டி வந்தாள்; வந்த எல்லை - வந்த பொழுது,
அறக்கொடி பாகர் - தரும வல்லியாகிய உமையை ஒரு பாகத்திலுடைய
வரும், வெள்ளி அம்பலவாணர் - வெள்ளி மன்றுடையாருமாகிய
சோமசுந்தரக் கடவுள், தாம் அத்திறம் தனபதியே என்ன - தாம் தவமேற்
சென்ற தனபதியே போல, உருக்கொண்டு செல்வார் - திருவுருவந் தாங்கிச்
செல்வாராயினர்.
கேட்டறிந்த
அறத் தவிசினோர் ஏவலாளரை அனுப்பினரென்பது
உடம்பொடு புணர்த்துரைக்கப்பட்டது. அறக்கொடி - அறமே உருவமாகிய
கொடிபோல்வாள்; அறம் வளர்த்தாள் என்றுமாம். திறம் - தன்மை, அத்திறத்
திருவுருக் கொண்டு என்று கூட்டுதலுமாம். (17)
|
[கலிவிருத்தம்]
|
பெருவிலைக்
குண்டலம் பிடரிற் பத்திபாய்ந்
தெரிகதிர் கவிழ்ப்பவா ளெறிக்கு மங்கதம்
அருவரைத் தோள்கிடந் திமைப்ப வாகமேற்
குருமணிக் கண்டிகை குலாய்ப்பின் கோட்டவே. |
|