II


மாமனாகவந்து வழக்குரைத்த படலம்323



என்னும் பொய்யா மொழியால், உள்ளத்தே மிக்கு நிகழ்வதனை முகம்
காட்டுதல் பெற்றாம். இறைவர் தாம் கொண்ட கோலத்திற்கேற்ப மாறிட்டா
ரிடத்து ஊடுதலும் மைந்தனிடத்து நயத்தலுமுடையார் போல் நடிப்பாராய்
முறையே முகவாட்டமும் மலர்ச்சியுமுடையவராய்த் தோன்றினார் என்க.
உட்கிடை - உள்ளக்கருத்து. கவிழ்ப்ப, இமைப்ப, கோட்ட, பெற்றியராய்,
முகத்தினராய் அவை குறுகுபவர் எனக் கூட்டி முடிக்க. (20)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
அரசனிங் கில்லை கொல்லோ வான்றவ ரில்லை கொல்லோ
குரைகழல் வேந்தன் செங்கோல் கொடியதோ கோதி னூல்கள்
உரைசெயுந் தெய்வந் தானு மில்லைகொ லுறுதி யான
தருமமெங் கொளித்த தேகொ லென்றறத் தவிசிற் சார்வார்.

     (இ - ள்.) இங்கு அரசன் இல்லை கொல்லோ - இந்நகரில் மன்னன்
இல்லையோ, ஆன்றவர் இல்லை கொல்லோ - அறிவால் அமைந்த முதியோர்
இல்லையோ, குரை கழல் வேந்தன் செங்கோல் கொடியதோ - ஒலிக்கின்ற
வீரக்கழலையணிந்த அரசனது செங்கோல் கொடுங் கோலானதோ, கோது இல்
நூல்கள் உரை செயும் தெய்வம் தானும் இல்லைகொல் - குற்றமற்ற வேத
சிவாகமங்களை அருளிய கடவுளும் இல்லையோ, உறுதியான தருமம் எங்கு
ஒளித்ததே கொல் - நிலைபேறுடைய அறமும் எங்கே சென்று ஒளித்ததோ,
என்று - என்று முறையிட்டு, அறத் தவிசில் சார்வார் - அறமன்றினைச்
சார்வாராயினர்.

     செங்கோல் வேந்தனோ ஆன்றவரோ தெய்வமோ அறமோ இருப்பின்
இத்தீமை நிகழாதென்பார் அவை இல்லையோ என்றாரென்க. கொடியதோ -
கோடியதோ; குறுக்கல் விகாரம்; கொடுமையுடையதாயிற்றோ என்றுமாம்.
நூல்களால் உரை செய்யப்படும் தெய்வம் என்றுரைத்தலும் அமையும்.
முன்னுள்ள கொல் இரண்டும் அசைகள். (21)

தனபதி வரவு நோக்கி வஞ்சனைத் தாயத் தார்கள்
இனைவுறு மனத்த ராகி விம்மித மெய்தி வெல்லும்
மனவலி யிழந்து பண்டு வழக்கலா வழக்கால் வென்ற
வினைநினைந் துள்ள மச்ச நாணினால் விழுங்கப் பட்டார்.

     (இ - ள்.) தனபதி வரவு நோக்கி - தனபதியின் வருகையைப் பார்த்து,
வஞ்சனைத் தாயத்தார்கள் - வஞ்சனையையுடைய பங்காளிகள், இனைவு உறு
மனத்தர் ஆகி - வருத்தமிக்க மனத்தினையுடையராய், விம்மிதம் எய்தி -
வியப்புற்று, வெல்லும் மனவலி இழந்து - வெல்லக் கருதிய மனவலியை
இழந்து, பண்டு வழக்கு அலா வழக்கால் வென்ற வினை நினைந்து - முன்பு
கொடுவழக்கால் வென்ற தீச் செய்கையை நினைந்து, உள்ளம் அச்சம்
நாணினால் விழுங்கப்பட்டார் - நெஞ்சம் அச்சத்தினாலும் வெட்கத்தினாலும்
விழுங்கப்பட்டார்.