II


324திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     வரவு நோக்கி முதலில் வியப்பும் பின் வருத்தமும் எய்தினர் என்க.
முன் போன்றே மீட்டும் வெல்லலாமென்னும் மனவலியுடையராயிருந்து பின்
அதனை இழந்தனரென்பார் 'வெல்லும் மனவலி யிழந்து' என்றார். வழக்கு
அலா வழக்கு - மெய் வழக்கல்லாத வழக்கு; கொடு வழக்கு. தமது தீமை
புலனாதல் குறித்து நாணமும், அரசன் ஒறுப்பன் என்பது கருதி அச்சமும்
உள்ளத்தே மிக்கனரென்க. (22)

மாதுல ராகி வந்தோர் மருகனைத் தம்பின் வந்த
தாதுல ராத கோதை தன்னொடுந் தழீஇத்தங் கண்ட
மீதுல ராத சாம வேதமார்ப் பவர்போல் வாய்விட்
டாதுல ரானீ ரந்தோ வையவென் றழுது நைந்தார்.

     (இ - ள்.) மாதுலர் ஆகி வந்தோர் - மாமனாகி வந்த இறைவர்,
மருகனை - மருமகனை, தம் பின் வந்த - தமக்குப் பின் தோன்றிய, தாது
உலராத கோதை தன்னொடும் தழீஇ - தங்கையோடும் தழுவி, தம் கண்டம்
மீது உலராத சாம வேதம் ஆர்ப்பவர் போல் - தமது திருமிடற்றினின்றும்
நீங்காத சாமவேதத்தினைப் பாடுபவர் போல, வாய் விட்டு - வாய் திறந்து.
ஆதுலர் ஆனீர் - (நீங்கள்) வறியரானீர்கள்; அந்தோ ஐய என்று அழுது
நைந்தார் - ஐயகோ வென்று புலம்பி வருந்தினார்.

     மருகனையும் தங்கையையும் தழுவியென்க. கோதை - பெண். தம்பின்
வந்த கோதை - தங்கை. கோதை என்பது மாலையும் ஆகலின் அப்பெயருக்
கேற்பத் 'தாதுலராத' என அடை கொடுத்தார். தாது உலராத - மகரந்தம்
அறாத. அவரது அழுகையொலியும் சாமவேத இசை போல இனிமையா
யிருந்ததென்பார் 'சாம வேத மார்ப்பவர் போல் வாய்விட்டு' என்றார்.
அந்தோ, ஐய என்பன இரக்கப் பொருளில் வந்த இடைச் சொற்கள். (23)

குடங்கையி னெடுங்க ணாளுங் குமரனும் வணிகர் தாளிற்
றடங்கணீ ராட்ட வீழ்ந்தார் தடக்கையா லெடுத்துப் புல்லி
மடங்கலே றனையார் தாமு மற்றவர் தமைத்தங் கண்ணீர்
நெடுங்கடல் வெள்ளத் தாழ்த்திக் குமரனை நேர்ந்து நைவார்.

     (இ - ள்.) குடங்கையின் நெடுங்கணாளும் - உள்ளங் கைபோல்
அகன்ற நீண்ட கண்களையுடைய தங்கையும், குமரனும் - புதல்வனும், வணிகர் தாளில் - வணிகரின் திருவடிகளில், தடம் கண் நீர் ஆட்ட - தம் பெரிய
கண்கள் அவற்றை நீராட்டும்படி, வீழ்ந்தார் - வீழ்ந்தனர்; தடக்கையால்
எடுத்துப் புல்லி - நீண்ட திருக்கரத்தினால் எடுத்துத் தழுவி, மடங்கல் ஏறு
அனையார் தாமும் - சிங்கவேற்றினையொத்த அவ்வணிகரும், அவர்தமை -
அவர்களை, தம் கண் நீர் நெடுங்கடல் வெள்ளத்து ஆழ்த்தி - தமது
கண்ணீராகிய பெரிய கடற்பெருக்கில் மூழ்குவித்து, குமரனை நேர்ந்து நைவார் - பின் புதல்வனைப் பார்த்து வருந்துவாராயினர்.