|
(இ
- ள்.) வேட்டம் செய்காதல் ஒரு நாள் தங்க - வேட்டையாடும்
விருப்பம் ஒரு நாள் உள்ளத்தில் வந்து பொருந்த, ஏகி - சென்று, வனம்
மேட்டு எங்கும் - காடு மலையுமாகிய எவ்விடத்தும், மாதடவி -
விலங்குகளைத் துருவி, எரி ஆம் நாட்டம் செய் காய் உழுவை - நெருப்புப்
பரக்கும் கண்களையுடைய சினத்தையுடைய புலிகளும், கை நீட்டும் யானை
- துதிக்கையை நீட்டும் யானைகளும், முகம் நாட்டும் பல் ஏனம் இவை
முதலா - முகத்தை நிலத்தில் நாட்டி உழுகின்ற பற்களையுடைய
பன்றிகளுமாகிய இவை முதலாகப் பல விலங்குகளை, ஓட்டம் செய் தேர்
இரவி - விரைந்து செல்லுந் தேரினையுடைய சூரியன், கோட்டின் கண் ஏறி
- அத்தகிரியின் மீது ஏறுதலால், இருள் ஊட்டும் அந்தி மாலை வரும்
அளவா - இருளைப் புகுவிக்கும் அந்திப் போது வருங்காறும், கோட்டம்
செய் வார்சிலையின் மாட்டு அம்பின் நூறி - வளைந்த நீண்ட வில்லிற்
பூட்டிய கணைகளாற் கொன்று, உயிர் கூட்டுண்டு மாநகரில் வருவான் -
அவற்றின் உயிர்களைக் கொள்ளை கொண்டு பெரிய நகரை நோக்கி
வருவானாயினன்.
மேடெங்கும்
என்பது சந்தம் நோக்கி விரிந்து நின்றது. முகத்தில் நாட்டப்பட்ட பல்லையுடைய ஏனம்
என்றுமாம். உம்பல் ஏனம் எனப்
பிரித்து ஆண் பன்றி என்றுரைப்பாருமுளர். கோடு - மலை. (4)
காலிற் கடும்புரவி மேலிற் கடிந்துவரு
காலக் கடந்தனிலொர் மறையோன்
மாலுற் றயர்ந்துமுகம் வேர்வைக் குறுந்தி வலை
வாரக் கிடந்துவிழி துயில்வோன்
மேலக் கடும்புரவி கால்வைப்ப வந்தணனும்
வீவுற் றவிந்தனன தறியான்
கோலிற் செலும்பரியின் மீனத்த னுந்தனது
கோயிற் புகுந்தனன வளவே. |
(இ
- ள்.) காலில் கடும்புரவி மேலில் கடிந்து வருகால் - காற்றைப்
போலும் கடிய செலவினையுடைய குதிரையின் மேல் விரைந்து வரும்
பொழுது, அக்கடம்தனில் - அக்காட்டின்கண், மால் உற்று அயர்ந்து - துயில்
மயக்கங்கொண்டு சோர்வெய்தி, வேர்வைக் குறுந் திவலை முகம் வாரக்
கிடந்து துயில்வோன் - வேர்வையாகிய குறுந்துளி முகத்தினின்றும் ஒழுகக்
கிடந்து உறங்குவோனாகிய, ஒரு மறையோன் மேல் - ஓர் அந்தணன் மேல்,
அக்கடும்புரவி கால் வைப்ப - அந்தக் கடுமையையுடைய குதிரை காலை
வைக்க, அந்தணனும் வீவுற்று அவிந்தனன் - அம்மறையோனும்
இறந்தொழிந்தான்; அது அறியான் - அதனை அறியாமல், கோலில் செலும்
பரியின் - அம்பு போலச் செல்லும் குதிரையோடு, மீனத்தனும் தனது
கோயில் புகுந்தனன் - மீனக் கொடியையுடைய பாண்டியனும் தன்
அரண்மனையையடைந்தான்; அவ்வளவே - அப்பொழுதே.
காலின்,
கோலின் என்பவற்றின் இன்னுருபு ஒப்புப் பொருட்டு.
துயில்வோனாகிய மறையோன் என்க. வீவுற்று அவிந்தனன் : ஒரு
பொருளிருசொல், அதறியான், அவளவே என்பன விகாரம். (5)
|