II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்337



     (இ - ள்.) பற்றிய பழிக்குத் தீர்வு - அங்ஙனந் தொடர்ந்த கொலைப்
பாவத்திற்குக் கழுவாயாக, பழமறைக் கிழவர் சொன்ன பெற்றியின் - தொன்று
தொட்டுள்ள வேதத்திற்குரிய அந்தணர் கூறிய வண்ணமே, ஐவேறு உண்டி -
ஐவகைப்பட்ட உணவினை, நதிக்கரை - ஆற்றங் கரையின் கண், பெரு நூல்
கேள்வி முற்றிய மறையோர்க்கு ஈந்தும் - வேத நூற் கேள்வி மிக்க
அந்தணர்க்கு அளித்தும், மூவர் ஆம் தாரு வேந்தைச் சுற்றியும் - மும்
மூர்த்திகளின் வடிவமாகிய அரச மரத்தை வலம் வந்தும், தூர்வை கொய்து -
அறுகம் புல்லைக் கொய்து, சுரபிகள் சுவைக்க ஈந்தும் - பசுக்கள் உண்ணக்
கொடுத்தும்.

     தீர்வு கழுவாய்; பிராயச்சித்தம். ஐவேறுண்டி - கறிப்பன, நக்குவன,
பருகுவன, விழுங்குவன, மெல்லுவன, தாருவேந்து - அரகமரம். அரச
மரத்தின் அடிப்பகுதி பிரமன் வடிவும், நடுப்பகுதி திருமால் வடிவும், இறுதிப்
பகுதி உருதிரன் வடிவும் உடையன என்பர். தூர்வை - அறுகு. பசுவுக்கு
உணவளித்தல் சிறந்த அறமாதலை,

"யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை"

என்னும் திருமந்திரத்தாலறிக. (7)

அகமரு டணத்தா லோம மாற்றியு மானைந் தாவின்
நகைமணிக் கோடு தோய்ந்த * நளிர்புனல் குடித்துந் தான
வகைபல கொடுத்து நீங்கா வலியதா யிழுது பெய்த
புகையழ லெனமே லிட்டுப் புலப்பட வளைந்த தன்றே.

     (இ - ள்.) அகமருடணத்தால் ஓமம் ஆற்றியும் - அகமருடண
மந்திரத்தால் ஓமஞ் செய்தும், ஆன் ஐந்து - பஞ்சகவ்வியத்தையும், ஆவின்
நகை மணிக்கோடு தோய்ந்த நளிர் புனல் குடித்தும் - பசுவின் விளக்கமாகிய
அழகிய கொம்பிற்றோய்ந்த குளிர்ந்த நீரினையும் பருகியும், தானவகை பல
கொடுத்தும் - பல வகையான தானங்களைச் செய்தும், நீங்கா வலியதாய் -
(அப்பழி) நீங்காத வலியினையுடையதாய், இழுது பெய்த புகை அழல் என்ன
மேலிட்டு - நெய் சொரிந்த புகையினையுடைய நெருப்பைப் போல
மேலோங்கி, புலப்பட வளைந்தது - கண்ணுக்குப் புலனாம்படி சூழ்ந்தது.

     அகமருடணம் - பாவத்தைப் போக்கும் ஒரு வேத மந்திரம். பசுவின்
பெருமையை,

"தங்கு மகில யோனிகட்கு மேலாம் பெருமைத தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்க ளெல்லா, மென்றும் பொருந்துவன
துங்க வமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்க மனைத்துந் தாமுடைய வல்ல வோநல் லானினங்கள்"

என்பது முதலிய திருத்தொண்டர் புராணச் செய்யுட்களாலும், சிவ தருமோத்தரத்தாலும் உணர்க. ஆனின் கோட்டில் புண்ணிய


     (பா - ம்.) * தோய்த்த.