|
(இ
- ள்.) சொல் பதம் கடந்த சோதி - சொல்லின் நிலையைக் கடந்து
நின்ற ஒளிவடிவான இறைவன், துதித்து அடிபணிந்த வேந்தை - துதி செய்து
அடி வணங்கிய வரகுணவேந்தனை (நோக்கி) மல் பெருந்தோளாய் -
மற்போரிற் றேர்ந்த பெரிய தோள்களையுடையவனே, கீழைவாயிலில்
பிரமசாயை நிற்பது - கீழைவாயிலில்கண் பிரம சாயை நிற்கின்றது (ஆகலின்),
அந்நெறியால் செல்லேல் - அவ்வழியாற் போதலொழிக; நிழல்மதி உரிஞ்சு
மேலைப் பொன் பெருவாயில் நீங்கி - ஒளியினையுடைய சந்திரமண்டலத்தை
உரிஞ்சுகின்ற பொன்னாலாகிய பெரிய மேலை வாயிலினின்று நீங்கி, நம்
மதுரைக்குப் போதி என்றான் - நமது மதுரைப் பதிக்குச் செல்வாயாக என்று
கூறியருளினான்.
| 'சொற்பதம்'
என்புழிப் பதம் |
என்பது நிலைமையென்னும்
பொருட்டு.
| "சொற்பதங்
கடந்த தொல்லோன்" |
என்பது திருவாசகம்.
போதி, த் எழுத்துப்பேறு. (23)
வரகுண னதுகேட் டையன் மருதினை வளைந்து நீங்கற்
கருமையால் வாயி றோறு மடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து
வரைதொளைத் தன்ன மேலை வாயிலாற் போவா னன்ன
திருமணிக் கோபு ரந்தன் பெயரினாற் செய்து சின்னாள். |
(இ
- ள்.) வரகுணன் அது கேட்டு - வரகுண பாண்டியன் அதனைக்
கேட்டு, ஐயன் மருதினை வளைந்து - இறைவன் வீற்றிருக்கும் இடை
மருதினை வலம் வந்து, நீங்கற்கு அருமையால் - பிரிதற்கு அருமையால்,
வாயில் தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து - வாயில்கள் தோறும்
பன்முறையும் வீழ்ந்து வீழ்ந்து வணங்கி, வரை தொளைத்தன்ன மேலை
வாயிலால் போவான் - மலையைத் தொளைத்தாலொத்த மேலை வாயிலாற்
போகின்றவன், அன்ன திருமணிக் கோபுரம் - அந்த அழகிய மணிகளழுத்திய
கோபுரத்தை, தன் பெயரினால் செய்து - தனது பெயரினாற் செய்து, சில் நாள்
- சில நாள் (அங்குத் தங்கி)
தொளைத்ததன்ன
என்பது விகாரமாயிற்று. மலையைத் தொளைத்தது
போலும் வாயில் என்னும் இக்கருத்து,
"வென்றெழு கொடியொடு
வேழஞ் சென்றுபுகக்
குன்று குயின்றன்ன வோங்குநிலை வாயில்" |
என நெடுநல்வாடையில்
வந்துளது. (24)
திருப்பணி பலவுஞ் செய்து தென்றிசை வழிக்கொண் டேகிச்
சுருப்பணி நெடுநாண் பூட்டுஞ் சுவைத்தண்டச் சிலையாற் காய்ந்த
மருப்பணி சடையான் கோயில் வழிதொறுந் தொழுது போற்றிப்
பொருப்பணி மாடக் கூடற் பொன்னக ரடைந்தான் மன்னோ. |
|