II


வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலம்347



தொடுபழி தொலைவித் தாண்ட சுந்தரத் தோன்றல் பாதக்
கடிமல ரடைந்து நாளுங் கைதொழு துலக மெல்லாம்
வடுவறு செங்கோ லோச்சும் வரகுண னறவோர் நாவால்
அடுசுவை யமுத மன்ன வரன்புகழ் செவிம டுப்பான்.

     (இ - ள்.) தொடுபழி தொலைவித்து ஆண்ட - விடாது தொடர்ந்த
பழியைப் போக்கிக் காத்தருளிய, சுந்தரத் தோன்றல் பாதக் கடிமலர்
அடைந்து - சோம சுந்தரக் கடவுளின் திருவடியாகிய மணமிக்க தாமரை
மலரைச் சார்ந்து, நாளும் கைதொழுது - நாள்தோறும் வணங்கி, உலகம்
எல்லாம் வடு அறு செங்கோல் ஓச்சும் வரகுணன் - உலகம் முழுதும்
குற்றமற்ற செங்கோல் செலுத்தும் வரகுண பாண்டியன், அறவோர் நாவால் -
அந்தணர்கள் நாவினால், சுவை அடு அமுதம் அன்ன அரன் புகழ் - சுவை
பொருந்திய அமுதத்தையொத்த இறைவன் புகழை - செவிமடுப்பான் -
கேட்பான்.

     தொடுபழி - விடாது தொடரும் பழி; தொடுத்த என விரித்து
வளைத்துக் கொண்ட பழி என்றுரைத்தலுமாம்; இஃது இப்பொருட்டாதலை,

"தொடுத்துங் கொள்ளா தமையலென்"

என்று புறப்பாட்டுள் வருதலானறிக. நாவைக் கலமாகவும், புகழை
உணவாகவும், செவியை வாயாகவும் உருவகங் கொள்க. அடு - அடுத்த,
பொருந்திய. ஏனைச் சுவைகளை வெல்லும் சுவையென்றுமாம்; நாவால்
அட்ட என்றுரைப்பாருமுளர். (26)

வேதமா கமம்பு ராண மிருதிகண் முதலா நூலும்
ஓதுவ துலகின் மிக்க துருத்திர வுலக மென்னும்
போதம தகங்கொண் டந்தப் பொற்பதி காண வேண்டுங்
காதல்செல் வழியே யீசன் கங்குலிற் கோயி லெய்தா.

     (இ - ள்.) வேதம் ஆகமம் புராணம் மிருதிகள் முதலாம் நூலும் -
வேதமும் ஆகமமும் புராணமும் மிருதிகளு முதலாகிய நூல்கள் அனைத்தும்,
ஒதுவது - கூறுவதாகிய, உலகில் மிக்கது உருத்திர உலகம் என்னும் -
உலகங்களில் மேம்பட்டது சிவலோகமென்னும், போதம் அகம் கொண்டு -
அறிவினை மனத்திற் கொண்டு, அந்த பொன்பதி காண வேண்டும் காதல்
செவ்வழியே - அந்த அழகிய சிவலோகத்தைக் காண எழுந்த விருப்பத்தின்
வழியே, ஈசன் கங்குலில் கோயில் எய்தா - சிவராத்திரியில் திருக்கோயிலை
அடைந்து.

     ஓதுவதாகிய போதம் என்க. உலகின் - பிரமன் முதலாயினார்
உலகங்களிலும். போதமது என்பதில் அது : பகுதிப்பொருள் விகுதி. (27)